முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் ..சுதாமா 3
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.
பதிவு 3 ... சுதாமா
பதிவு 3 ... சுதாமா
சரிந்து கீழே விழுந்தார் சுதாமர் ... கண்கள் சொருகிக்கொண்டன ... வாயில் ஊரும் நீரும் சுரக்காமல் நின்று போனது ... பலர் ஓடி வந்து தண்ணீர் கொடுத்து எழுப்பினர் ... முகத்தில் கண்ணனே யமுனை நீரை தெளித்தததைப்போல் உடனே முழித்துக்கொண்டார் சுதாமர் ...
எங்கிருக்கிறேன் ... என் கண்ணன் வந்து விட்டானா ... இப்படி கூட்டம் போட்டீர்கள் என்றால் என் கண்ணன் என்னை எப்படிப் பார்ப்பான் ..?. கொஞ்சம் விலகி நில்லுங்கள் ....
ஏ கிழவரே .. யார் நீர் ... துவாரகையை சேர்ந்தவராய் தெரியவில்லை ... கண்ணன் உங்கள் பேரனா .. இந்த ஊரில் வந்து தொலைத்து விட்டீரா ?
ரொம்ப நாள் சாப்பிடாதவர் போல் தெரிகிறது .. அதோ ஒரு சத்திரம் .. உங்களைப்போல ஏழைகளுக்கு அங்கே இலவச உணவு உண்டு ....வாருங்கள் அழைத்துச்செல்கிறேன்.... கூட்டத்தில் ஒருவன் உரக்க சொன்னான் ...
"கண்ணன் என் பேரன் இல்லை என் உயிர் ..."
ஆமாம் கண்ணனை நான் தொலைத்துத்தான் விட்டேன் .. ஒன்றாய் வளர்ந்தோம் ஒருவராய் உண்டோம் ,
என் முதுகு அவன் அமரும் பள்ளிக்கூடம் .. என் கரங்கள் அவன் திருடிக்கொடுத்த வெண்ணையை மறைத்துக்கொள்ளும் சமையல் அறை ....
என் இதழ்கள் அவன் உண்டபின் படுத்துக்கொள்ளும் பள்ளியறை .... என் நெஞ்சம் அவன் வசிக்கும் இல்லம் ... என் செவிகள் அவன் கீதத்தை கேட்கும் கர்ப அறை...
நான் பிரசவிக்கும் பாடல்கள் அவன் சுவைக்கும் பால் பாயசம் .... கொஞ்சம் என் கண்ணனை எனக்கு காட்டுங்களேன் ... என் மன்னனை பார்க்க வேண்டும் அவன் மடி மீது விழுந்து நான் உன் சுதாமா என்று கதறி அழ வேண்டும் .....
ஐயோ பாவம் .. கீழே விழுந்ததில் இந்த பெரியவருக்கு பித்தம் அதிகமாகி விட்டது அத்துடன் பசி மயக்கம் .... எல்லோரும் பாவம் பாவம் என்று சொல்லி அங்கிருந்து அகன்றனர் ...
மாலை ஆகாயத்தில் மாலை போட்டு கதிரவனை அவன் வீட்டுக்கு வழி அனுப்பிக்கொண்டிருந்தது ....
கண்ணனை பார்க்கும் நம்பிக்கை குறையவில்லை ... கண்ணா கண்ணா உன் ஊரில் உன் அருகில் உன்னை கூப்பிடுகிறேன் ... காதில் விழவில்லையா இன்னும் கண்ணா ....
காவலாளிகள் சிலர் பார்வையில் சுதாமர் பட்டார் ... ஒருவன் சொன்னான் பாவம் கண்ணா கண்ணா என்றே சொல்லிக்கொண்டிருக்கிறான் ... நம் மன்னரை பார்க்க வந்தவர் போல் தெரிகிறது ...
அவர் முகத்தைப்பார் . வேதம் அறிந்தவர் என்று நினைக்கிறேன் ... உஞ்சவிருத்தி செய்து பிழைப்பவர் போல் இருக்கிறது ...
இந்த ஊரை சேர்ந்தவராக தெரியவில்லை ... வா அந்த பெரியவர் யார் என்று அறிந்து கொள்வோம் ...
கண்ணா நான் சுதாமர் கண்ணா .. உன் தரிசனம் எனக்குத் தரமாட்டாயா ... பொருள் கேட்ப்பேன் என்று பயப்படுகிறாயா ... உன் தரிசனம் மட்டுமே பெற வந்துள்ளேன் கண்ணா ....
காவலருக்கு பெயர் தெரிந்து போனது ... அவரிடம் செல்ல தேவை இல்லை ...கண்ணா என்று சொன்ன ஓவ்வொரு வார்த்தையும் காவலர்களை வேகமாக கண்ணன் இருக்குமிடம் ஓட வைத்தது ...
ஒரு அதிசயம் அங்கே நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த நிலவு வானில் உள்ள நட்சத்திரங்களை க்கூவி அழைத்து மின்னியது போதும் இங்கே நட்பு எனும் பாரிஜாத மலர் ஒன்று மலர்ந்து மின்னபோவதை வந்து பாருங்கள் ....
இது நட்பில் மலர இருக்கும் முக்தி
நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருக்கும் கதிரவனை பிடித்து இழுத்துக் கொண்டு சந்திரன் இருக்குமிடம் அழைத்து வந்து ... நீயும் பார் இந்த அழகை என்றே .....
Comments