முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்... சுதாமர் 5

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.


பதிவு 5... சுதாமா


விழுந்து அடித்துக்கொண்டு ஓடிய காவலாளிகள் கொஞ்சம் நின்றனர் .... 

"அபரிஜிதா ... நாம் அரண்மனை காவலாளிகள் , அந்தபுரத்திற்கு அல்ல ... நம் மன்னனோ இப்பொழுது அந்தப்புரத்தில் இருக்கிறார் ... நாம் போய் அங்கே எப்படி சொல்வது ...? அங்கே கட்டுப்பாடுகள் அதிகம் ... "

"ஆமாம் ஆமாம் வக்ரத்தூண்டா , ... சரி வந்து விட்டோம் அங்கே சொல்லி பார்ப்போம் ... இல்லை என்றால் விதி ... சுதாமர் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ..... "

அந்தப்புரம் .... கண்ணபுரம் ... 

விஸ்வகர்மா பார்த்து பார்த்து கட்டிய புரம் ... 

காதல் புறமுதுகை ஏற்றுக்கொள்ளும் இடம் .... 

கண்ணன் புல்லாங்குழலில் புதுமை படைக்கும் இடம் ... 

பூபந்தல்கள் பொங்கி வழியும் புரம் ....

உறவு எனும் தேனில் உல்லாசம் எனும் பால் பாயசம் அதை ஊற்றி இனிமை எனும் நாட்டு சர்க்கரையை கொட்டி , கனவுகள் எனும் ஏலக்காய் தெளித்து , உதடுகள் எனும் குங்கமப்பூவைக்கொண்டு எங்கும் ஒத்தடம் கொடுத்து இளமையை பரிமாறிக்கொள்ளும் புரம் ...

அங்கே தனியாக காவலாளிகள் .... காற்றும் புகாமல் காவல் காத்தனர் ...அங்கே ஓடிப்போய் விழுந்தனர் இருவரும் .... மாரீசனும் , மங்கோத்மநனும்  அங்கே காவல் ... 

ஒரு உதவி வேண்டும் சுதாமர் என்பவர் நம் மன்னரை பார்க்க வந்திருக்கிறார் ..  வேதம் தெரிந்தவர் ... நம் மன்னனை சின்ன வயதில் இருந்தே தெரியுமாம் ... பார்க்க பாவமாக இருக்கிறது ..  உயிர் எப்போ வேண்டுமானாலும் போகலாம் ... மன்னரிடம் சொல்ல முடியுமா ...? கெஞ்சினார்கள்  இருவரும் 

சிரித்தான் மாரீசன் .... நம் மன்னரை தெரியாதவர்கள் யார் ?  போ போ ... இப்பொழுது மன்னரை தொந்தரவு செய்யக்கூடாது ... நாளை பார்க்கலாம் .... 

இவனிடம் சொல்லி பிரயோசனம் இல்லை ... கத்தினால் கண்ணன் வர மாட்டான் ... பக்தியால் பரவசப்படுபவன் ... இங்கேயே அமர்ந்து பஜனை செய்வோம் .... கண்ணன் கண்டிப்பாக வருவான் .... என்றே இருவரும் ஒரே குரலில் 

கண்ணை கொள்ளை கொண்டவனே கண்ணா , மண்ணை அளந்தே மண்ணை தின்றாய் ... விண்ணை அளந்தே விழி தனை திறந்தாய் ... 

அத்தி மரத்தில் வந்தவனே , அழகர் என்றே பெயர் கொண்டவனே ... அள்ளி விளையாடும் பக்திக்கு முக்தி கொடுப்பவனே கண்ணா ..  

உனதருமை சுதாமர் உன்னை தேடி வந்தே காத்திருக்க மஞ்சம் அதை கொஞ்சம் தள்ளி வைத்தே தாள் திறவாய் மணி வண்ணா .... 

உரக்க பாடப்பாட கண்ணன் மனம் வெண்ணெயாய் உருகியது அங்கே ... கட்டிய கரங்களை அவிழ்த்து விட்டாள் ருக்மணி ... 

கருப்பு கண்ணன் முகத்தில் சிவப்பு குங்குமம் ... 

துடைத்துவிட்டாள்  தூயவள் ... மதுர உதடுகளில் வழிந்தோடும் தன் இதழ்களை திரும்பி வாங்கிக்கொண்டாள் ... 

கண்ணா ... உனைக்காண யாரோ சுதாமராம் ... காத்திருக்கிறார் ... தொடரும் நம் காதல் நாளை இங்கே ... தொடராமல் போய் விடும் அவர் வாழ்க்கை நீ  இப்பொழுது அங்கே போகா விட்டால் .... 

கண்ணன் சிரித்தான் ... ருக்மணியின் அனுமதி இருந்தால் தான் சுதாமரின் வாழ்க்கையை புரட்டிப்போட முடியும் ... கிடைத்து விட்டது இப்பொழுது .... 

அந்தப்புர கதவுகள் இடி விழுந்ததைப்போல் திறந்தன ... அங்கே கமலங்கள் பூத்துக்குளிங்கிய முகம் , 

கோடி ஆதவன் ஒன்றாய் கூடி உதித்த முகம் , மயில்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மயக்கும் பீலிகள் கேசத்தில் ... 

புல்லாங்குழல் புன்னகைக்க , பூந்தென்றல் பண் இசைக்க , பூஷ்பங்கள் கோலம் போட , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் , கண்களில் ஆதங்கத்தை தேக்கி , உதடுகளில் சுதாமரை நிறுத்தி யமுனையை விழிகளில் நிரப்பி .... யாரது .... என்ன சொன்னீர்கள் சுதாமரா ... என்னை பார்க்கவா ... எங்கே என் சுதாமா....  எங்கே என் உயிர் .... 

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை ... கண்ணனின்  ஆவேசம் அங்கே சுனாமியாக எழும்பும் என்றே ...

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை