முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். ...சுதாமா 6
பதிவு 6... சுதாமா
தாழம்பூ கடம் வாசிக்க , மல்லிகை தன் மணத்திற்கு மணம் முடிக்க , பாரிஜாதம் ஸ்வாகதம் கிருஷ்ணா என்றே குரல் கொடுக்க , பவழமல்லி, கண்ணன் நடந்து வரும் பாதை எங்கும் பரவி நின்றது ...
கண்ணனின் ஒரு பக்கம் தவிப்பு இன்னொரு பக்கம் சுதாமரை காக்க வைத்து விட்டோமே என்ற கோபம் ...
எப்பொழுது சுதாமர் துவாரகைக்கு வந்தார் ...? எங்கே அமர்ந்திருக்கிறார் ?
ஏன் என்னை யாரும் கூப்பிடவில்லை ?
கண்ணனின் கோபம் கண்டதில்லை யாரும் அங்கே பார்த்ததில்லை அவன் பரிதவிப்பை .... கேட்டதில்லை அவன் பெரும் குரலை ...
அரண்மனைக்குள் தீ பரவியதைப்போல் செய்தி பரவியது ... நம் மன்னர் கோபமாக இருக்கிறார் ...
அவர் நண்பர் சுதாமரை காக்க வைத்ததற்காக ..... ராமன் தொடுத்த அம்பு போல் பாய்ந்து வருகிறார் .... தடை போட யாருக்கும் துணிவில்லை ... மடை திறந்த வெள்ளமென வருகிறார் .....
அவர் நடையில் கோபம் கொப்பளிக்க , வார்த்தைகளில் நெருப்பு அனல் வீச , கண்களில் யமுனை நடனம் ஆட , கண்ணனோ ஆடாமல் அசையாமல் வருகிறார் . ....
ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள் ... "ஐயோ நாம் தானே பாவம் கிழவர் என்று சொல்லிக்கொண்டு உதவி ஏதும் செய்யாமல் நகர்ந்து ஓடி போனோம் ..."
கண்ணனுக்கு அது தெரிந்து விட்டால் ...
மாரீசன் மனம் புலம்பினான் ... "அடாடா அபராஜிதன் கெஞ்சும் போது மன்னரை கூப்பிட முடியாது ... நாளை பார்ப்போம் என்று சொன்னோம் ... எனக்கு நாளை என்று ஒன்று இனி உண்டா ... கண்ணா என்னை மன்னித்து விடு ....."
கண்ணன் நடக்க துவாரகையே அவன் பின்னால் ஓடியது ....
கண்ணா ... நீ வரப்போவதில்லை ... நான் உன்னை பார்க்காமல் போகப்போகிறேன் ....
ஐயோ சுசீலை ஆசையுடன் கட்டித் தந்த அவல் உனக்கு தராமல் போகிறேன் ... அவல் தந்த அவள் என்னை மன்னிக்க மாட்டாள் .....
நீ எப்பொழுது கூப்பிட்டாலும் வருவேன் என்றாயே கண்ணா ... அதுவும் பொய்யா ?
ஒன்றாய் உணவருந்தி ஒன்றாய் விளையாடி ஒன்றாய் உறங்கினோமே எல்லாமே கானல் நீரோ கண்ணா ?
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?
நீ எங்கே நான் எங்கே ?... பட்டு பீதாம்பரம் அணிபவன் நீ ... தொட்டு ஓட்டைகளை அடைப்பவன் நான் ...சேவை செய்ய உனக்கு ஆயிரம் பேர்கள் ... என் தேவையை யார் அறிவார் கண்ணா , உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் ....
உறங்கிப்போனார் சுதாமர் ... கண் விழித்து பார்க்கும் போது கால்களை யாரோ பிடித்து விடுவதைப்போல் ஒரு பிரமை ...
பிரேமையுடன் ஒருவன் அங்கே வேலை செய்து கொண்டிருந்தான் ....
Comments