முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் .சுதாமா 7
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.
பதிவு 7... சுதாமா
பதிவு 7... சுதாமா
மெதுவாக கண்களை திறந்தார் சுதாமர் ...
அங்கே அவர் பார்த்த காட்சி அவர் பல ஜென்மங்கள் செய்த பாவங்களை மூட்டை கட்டி பிரவாகம் எடுத்து ஓடும் யமுனையில் தூக்கி எறிந்ததைப்போல் இருந்தது ....
பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன் பட்டு பீதாம்பரத்துடன் ,
கேசத்தில் விரிந்தாடும் மயில் பீலிகளுடன் ,
கரங்களில் அமுத கானம் தரும் குழலுடன்,
நவரத்தினங்கள் பதிந்த கீரிடம் ,
முத்துக்கள் புன்னகைக்க ,
வைடூரியம் பலபலக்க ,
கோமதகங்கள் கோவிந்தா சரணம் என்று முழக்கமிட , பவழம் கண்ணன் உதடுகளில் ஓடிப்போய் அமர்ந்து கொள்ள ,
மேனி எங்கும் தங்கம் ஜொலி ஜொலிக்க , எல்லா நகைகளும் வெட்கப்படும் படியான புன்னகையுடன் ,
தேன் சிந்தும் குரலில் , மதுரம் நிறைந்த விழிகளில் , கற்கண்டு எனும் பரிவை கலந்து ,
வாழ்க்கையில் சுதாமர் பார்த்திருக்காத முந்திரி , திராட்சை , பாதாம் ஏலக்காய் ,
துவாரகையில் விளைந்த கரும்புகளில் எடுத்த சர்க்கரை, குங்கமப்பூ , பச்சை கற்பூரம் இவைகளை பொடி பண்ணி சரியான அளவில் கலந்து கண்ணன் வார்த்தைகளில் அங்கங்கே தெளித்துப் பேசினான் ...
"என் சுதாமாவையா நான் இப்பொழுது பார்க்கிறேன் ....
ஓடி வரும் யமுனையில் நீந்திவரும் சுதாமா,
ஆடி வரும் பொய்கையில் பாடி வரும் சுதாமா ,
நாடி வரும் பசியில் நாவில் தேன் அதை ஊற்றும் சுதாமா ,
நடிப்புக்கு உயிர் எனும் வேறு பெயர் கொடுத்த சுதாமா ,
திருடும் வெண்ணெய் அதில் திகட்டாத நெய்யாக உருகும் சுதாமா
அடடா எவ்வளவு நாட்கள் ஓடி விட்டது ... கண்ணன் நினைவு இன்றுதானா உனக்கு வந்தது சுதாமா ?
எங்கிருந்தாய் இவ்வளவு நாட்கள் ? கண்ணன் அவன் கள்வன் என்றோ மறந்து போனாய் ?
திருடுபவன் திருந்தவே மாட்டான் என்று முடிவெடுத்தாயோ சுதாமா ?
நீ இந்த நிலையில் நான் காணவோ காத்திருந்தாய் சுதாமா ?
வயிறு ஒட்டிப்போய் வறுமை அரசாள, அதன் ராஜாங்கம் அணிந்திருந்த ஆடைகளில் பிரதிபலிக்க
உடுத்தியிருந்த ஆடை வழியாக வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து கண்ணன் திருமுகத்தை கண்டு ரசித்தது ...
உடுத்திய உடையில் ஏழ்மை ஏளனம் செய்ய, கண்ணன் நான் உண்டு என்றே நினைக்க மறந்தாயோ சுதாமா ?
யாருக்காக காத்திருந்தாய்? ,
யார் சொல்ல இன்று வந்தாய் ... ?
எல்லோரும் நன்றாக இருக்கவே அரசாள்கிறேன் .. என் உயிர் ஒன்று எங்கோ தவிப்பதை மறந்து விட்டேன் ...
பாவி நான் சுதாமா ... அரசன் என்ற போர்வையில் ஆண்டி ஒருவன் என் நண்பன் என்பதை அதே போர்வை போட்டு மூடி விட்டேன் .... என்னை மன்னிப்பாயோ சுதாமா ?
*கண்ணன் அங்கே கதருவதை கேட்ட அரண்மனை அழுதது ,
துவாரகை துவண்டது...
ருக்மணி தவித்தாள் ,
கவி பாடும் தமிழ்மணிகள் வருந்தினர் ....
தேவர்கள் சிந்தினர் கண்ணீரை ,
தேவியர்கள் தேடினர் அமைதியை ....
கண்ணன் சிந்திய கண்ணீர் யமுனையில் கலந்து முத்துக்களாய் அங்கே மின்னியது ...*
Comments