முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். சுதாமர் 2
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.
சுதாமர் 2
சுதாமா இன்னும் பேசிக்கொண்டே நடந்தார் .. கண்ணன் உதடுகளில் நர்த்தனம் ஆடும் போது கால்களில் வலி தெரியவில்லை ...
கண்ணனை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் அவருடைய தோஷங்களை அங்கே கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டிருந்தது ...
கண்ணா கேட்க மறந்து விட்டேன் ... உன் சிங்கார சிகையில் மயிலின் பீலி இருக்குமே ... யாராவது குருகுலத்தில் தூங்கும் போது அவர்கள் காதில் அதில் நுழைத்து கேலி செய்வாயே ... இன்னும் அது உன் சிகையில் இருக்கிறதா கண்ணா ....
கண்ணா எல்லோரும் மயங்க புல்லாங்குழலில் உன் மதுர கானத்தை பிரசவிப்பாயே இப்பொழுது உனக்கு நேரம் கிடைக்கிறதா உன் குழல் எடுத்து வாசிக்க ?
மாடுகள் எல்லாம் கோகுலத்தில் அம்மா அம்மா என்று சொல்லாமல் கண்ணா கண்ணா என்றே அழைக்குமே ... துவாரகையில் பசுக்களை பார்க்க உனக்கு நேரம் இருக்கா ...
கோபியர்களை சீண்டிவிட்டு வெண்ணெய் திருடுவாயே ... இன்றோ ஒரு தேசத்திற்கு ராஜா ... திருடுவதை விட்டு விட்டாயா ...
கண்ணா உன்னால் முடியாது .. நீ இன்றும் திருடன் தான் ... எல்லார் மனங்களையும் துவாரகையில் உட்காந்தபடியே திருடி விடுகிறாயே உன் பிறவி குணம் உன்னை விட்டு போகுமா என்ன ?
வயிற்றை என்னவோ செய்தது ... அதற்குப் பெயர் பசி என்று அவருக்கு புரியவில்லை ... .. சுசீலை வழியில் பசிக்குமே என்று கட்டிக் கொடுத்த கொஞ்சம் தினை மாவு ... அவரைப் பார்த்து சிரித்தது ... என்னை கொஞ்சம் உள்ளே அனுப்பேன் .. இன்னும் நடக்க கொஞ்சம் சக்தி தருவேன் என்று ....
அதை கரங்கள் தடவி கண்ணனை பார்க்கப் போகிறேன் ... ஏ வயிரே கொஞ்சம் பொறுத்துக்கொள் ... அவன் சாப்பிட்ட பின் உனக்கும் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டார் ...
வழியில் அவரைப்போல் ஒரு தள்ளாத கிழவர் நடந்து வந்து கொண்டிருந்தார் ... வறுமை இன்னொரு வருமையிடம் கடன் கேட்டது ... ஐயா .. பசிக்கிறது .. உங்களிடம் புசிக்க ஏதாவது கிடைக்குமா ? ... தடவிய கரங்கள் தாராளமாய் அள்ளிக் கொடுத்தன அந்த தினை மாவை ....
இதோ துவாரகை ... அதோ தெரிகிறதே என் கண்ணனின் அரண்மனை ... அடடா எப்படி அதற்குள் நான் போவேன் .? கண்ணனை எனக்குத் தெரியும் என்று சொன்னால் , அது கிடக்கட்டும் அவனுக்கு உன்னைத் தெரியுமா என்று கேட்ப்பார்களே ...
நான் கண்ணனின் பால்ய நண்பன் என்றால் இவன் பித்தன் பேத்துகிறான் என்பார்களே ... கண்ணா இவ்வளவு தூரம் வந்து விட்டேன் ... உன்னை பார்க்காமல் திரும்ப சொல்கிறாயா ..
Comments