பாமாவின் கண்ணன் 1


பாமாவின் கண்ணன் 1



செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணன் நிகழ்த்தி வந்த சாகசங்களைக் குறித்து அவள் நிறையக் கேள்விப் பட்டிருந்தாள். 

துவாரகையில் அவற்றைக் குறித்துப் பேசாத நபர்களே இல்லை! 

இதைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி மக்கள் மகிழ்ந்தனர். 

அதிலும் குரு வம்சத்து அரசனான பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ராக்ஷசவர்த்தத்தில் இருந்து கண்ணன் மீட்டுக் கொண்டு வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.  

வாரணாவதத்தில் துரியோதனாதியரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஐவரும் அங்கிருந்து உயிருடன் தப்பிச் சென்றது ஒரு அதிசயம் எனில் அவர்கள் ராக்ஷஸவர்த்தத்தில் உயிருடன் இருந்து தப்பி வந்தது இன்னொரு அதிசயம். 

அதோடு மட்டுமில்லாமல் யாதவர்களின் நீண்ட வருடங்களாக எதிரியான ஜராசந்தனைக் கண்ணன் தனி ஒருவனாக  திரௌபதியின் சுயம்வரத்திலிருந்து விலக வைத்ததும், அவனைக் காம்பில்யத்தை விட்டே ஓட வைத்ததையும் பேசப் பேச அவர்களுக்கு அலுக்கவில்லை. 

துருபதனின் அருமையும், பெருமையும் நிறைந்த மகளைக் கரம்பிடிக்கப் பாண்டவர்களுக்கு உதவி செய்தது, இறந்து கொண்டிருந்த பானுமதிக்கு அளித்த வாக்குறுதி, அவள் கணவன் துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதி, அதை அவன் நிறைவேற்றிய விதம். 

ஐந்து சகோதரர்களையும் எவ்விதச் சண்டையும் பூசலும் இல்லாமல் ஹஸ்தினாபுரத்திலிருந்து காப்பாற்றிக் காண்டவப்ரஸ்தம் கொண்டு சேர்த்தது, 

அங்கே புதியதொரு நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரைச் சூட்டியது அனைத்தையும் துவாரகை மக்கள் பேசும்போது பாமா கேட்டுக் கொண்டிருப்பாள்.

கண்ணா உனை காணும் நாளும் வந்திடாதோ ... 

எல்லோரும் உனை தெய்வம் என்கிறார்கள் ... நீ என் தெய்வம் அல்ல ... 

அதற்கும் மேலே ... 

உன் மீது நான் கொண்டது காதல் அல்ல .. 

என் சரணாகதி ... 

நீயே எனக்கு எல்லாம் ... உன் பார்வை ஓராயிரம் கதை சொல்லுமே , 

உன் குழல் பிரசவிக்கும் கீதத்தில் என் பெயர் கரையவில்லையா கண்ணா  ... ? 

உன் சிரசில் வீற்றிருக்கும் மயில் பீலிகள் என்ன தவம் செய்தன கிருஷ்ணா ...? 

என்றும் எப்பொழுதும் உன்னுடன் இருக்கின்றனவே ... 

உன் பட்டு பீதாம்பரத்தில் என்னையும் நூலாக சேர்த்துக்கொள்ள மாட்டாயா கண்ணா ? 

உன் பாதத்துளிகள் செய்த புண்ணியம் கூட நான் செய்ய வில்லையா கண்ணா ? 

கரைந்து போனாள் பாமா .....

மதுராவில் கிருஷ்ணன் தன் மாமன் ஆன கம்சனோடு போரிட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்திலேயே அவள் கண்ணனை மணக்க முடிவை எடுத்து விட்டிருந்தாள். 

அப்போது அவள் வயது ஆறு மட்டுமே! அந்த வயதிலேயே கிருஷ்ணன் மேல் அவளுக்கிருந்த ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்ததோடு தன் சிநேகிதிகளோடு விளையாடும் போதெல்லாம் அவள் தன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்றே அழைத்துக் கொள்வாள். 

கிருஷ்ணனின் நினைவுகள் அவளைத் துரத்தின. 

அவள் கனவுகளில் அவன் மட்டுமே வந்தான். 

அவளைக் கவர்ந்து தன் மணமகளாக ஏற்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். 

பல சமயங்களிலும் அவள் கனவுகளில் கிருஷ்ணனோடு தான் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகக் கண்டிருக்கிறாள். 

அது தான் உண்மையோ என்னும்படியாக இருக்கும். 

பின்னர் கனவு கலைந்து திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்திருக்கையில் தன்னைப் போன்ற உயர்குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படி எல்லாம் கனவுகள் வரலாமா என்று அவள் வெட்கம் அடைவாள். 

ஆனால் அதற்காக தன் கனவுகளில் கிருஷ்ணன் வராமல் போய்விடப் போகிறானே என நினைத்து அவள் தினமும் இரவு தூங்கப் போகையில் இன்று கனவில் கிருஷ்ணன் வர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வாள்.




Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை