குருவின் கடாக்ஷம்




குருவின் கடாக்ஷம் 




சிருங்கேரியில் சங்கரர் தங்கியிருக்கும் இடத்திற்கு அநேக சீடர்கள் வந்தார்கள். அவர்களில் கிரி என்ற சீடரும் ஒருவர். 

இவர் சற்று மந்த புத்தி உடையவர். அதிகம் பேசமாட்டார். 

ஆனால் குரு சங்கரர் மீது மிக்க பக்தி கொண்டிருந்தார். எப்போதும் குரு சேவையிலேயே ஈடுபட்டிருப்பார். 

பாடங்களை கிரஹிக்கத் திறமையற்றவர். 

இதனால் மற்ற சீடர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆனால் கிரி வரவில்லை.

அவர் குருவின் துணிகளைத் துவைப்பதற்காக துங்கபத்திரா நதிக்குச் சென்றிருந்தார். 

கிரி வந்தவுடன் பாடம் ஆரம்பிக்கலாம் என்று சங்கரர் கூறினார். 

கிரியோ மந்தமாக இருக்கிறார். அவருக்காக நாம் காத்திருப்பானேன்! என்று மற்ற சீடர்கள் கூறினர். 

தம் சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சங்கரர், மனதினாலேயே தியானம் செய்து கிரிக்கு எல்லா வித்யைகளும் தோன்றட்டும் என்று அருள்புரிந்தார். 

சிறிது நேரத்திற்கெல்லாம் கிரி உள்ளே நுழைந்தார். 

தம் குருவைப் பாராட்டி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். 

இந்த துதியே *தோடகாஷ்டகம்* ஆனது. இதனாலேயே கிரி, *தோடகாச்சாரியார்* என்று அழைக்கப்பட்டார். 

அன்றிலிருந்து மற்ற சீடர்கள் தோடகாச்சாரியார் மீது மிக்க மதிப்பு வைக்க ஆரம்பித்தனர். 

குருவின் உத்தரவுப்படி எல்லா சீடர்களும் பல நூல்களை இயற்றினார்கள். 

சங்கரர் அருளியுள்ள தைத்திரீய உபநிஷத் உரைக்கும், பிருஹதாரண்யக உபநிஷத் உரைக்கும், சுரேஸ்வரர் மறு விளக்க உரை இயற்றியுள்ளார். 

இது தவிர நைஷ்கர்ம்ய ஸித்தி என்ற தனி நூலும் செய்திருக்கிறார். 

அதுபோல சங்கரரது தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்திற்கு மானஸோல்லாசம் என்ற பெயரில் ஒரு உரை இவரால் செய்யப்பட்டது. 

பஞ்சபாதிகா என்ற பெயரில் பிரம்மசூத்திரங்களுக்கு பொருள் கூறும் ஒரு விரிவான நூலையும், சங்கரருடைய பிரபஞ்சஸாரம் என்ற மந்திர சாஸ்திர நூலுக்கு ஒரு உரையும் பத்மபாதரால் செய்யப்பட்டது. 

தோடகாச்சாரியார் சங்கரர் பெயரில் தோடகாஷ்டகம் என்ற துதியையும், ச்ருதி ஸாரஸமுத்தரணம் என்ற நூலையும் இயற்றியிருக்கிறார். 

ஹஸ்தாமலகருடைய ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் எனப்படும். இவ்வாறு சங்கரர் சீடர்களுடன் 12 ஆண்டுகள் சிருங்கேரியில் தங்கியிருந்தார்.

குருவின் அருள் இருந்தால் எதுதான் நடக்காது ? 


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை