பச்சைப்புடவைக்காரி-- ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம்
என் எண்ணங்கள்
ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம்
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தேன் ---
எதோ என் தொண்டையை கொஞ்சம் அடைத்தது - இதுவரை இல்லாத அனுபவம் -- ஒரே ஒரு நாமத்தில் கண்கள் நிலைத்து நின்று அடுத்த நாமாவளிக்கு போக கொஞ்சம் மறுத்தது –
கண்கள் நீரைக்கொட்டின ---- ஏன் இந்த அனுபவம் இன்று? இதே நாமாவாளியை இதற்க்கு முன்னால் கூட சொல்லியிருக்கிறேன் - அப்போது தொண்டையை ஏதும் அடைக்கவில்லை- கண்கள் கண்ணீரை மறந்து இருந்தது ......
பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா |
எல்லோரையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன் ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்த பால திரிபுரசுந்தரியை மாதங்கியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே - கேட்டிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் - அவள் பாதங்களில் இன்று சாஷ்ட்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் ....
தாழம்பூவின் மணமும் குண்டு மல்லியின் குணமும் பாரிஜாதங்களின் பரிவும் கொஞ்சும் சலங்கையில் வேதம் நின்றாட தேவர்களுக்கும் தெரியாதவள் , புரியாதவள் புன்னகையை உதடுகளில் தவழவிட்டு ஜல் ஜல் என்று வந்தாள் மரகத சிலை ஒன்று உயிர் கொண்டு மாணிக்க மூக்குத்தியுடன் ஜொலித்துக்கொண்டு வந்தாள்.
தொடுக்கும் கடவுட் பழம்பாடல்தொடையின்
பயனே நறை பழுத்த
துறைந் தீந் தமிழினொழுகு நறுந் சுவையே
அகந்தைக் கிழங்கையகழ்ந்
தெடுக்குந் தொழும்பர் உளக் கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனங் கடந்துநின்ற
ஒருவன் திருவுளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலயத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!”
பச்சைப்புடவைக்காரி சிரித்தாள் என்னப்பா மனதில் குமர குரூபரர் என்ற நினைப்பா? வரவேற்பு இன்று தட புடலா இருக்கு ...
அம்மா எல்லோரையும் உன்னிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன் ஆனால் முக்கியமான ஒரு பாத்திரத்தை பற்றி கேட்க மறந்துவிட்டேன் ...
அம்மா கருணை கூர்ந்து பால திரிபுரசுந்தரியைப் பற்றி இந்த அடியேனுக்கு கொஞ்சம் சொல்லுங்கள் .... அன்னையின் முகம் அன்று மலர்ந்த தாமரையானது ... முகம் ஆயிரம் கதிரவனை தன் மீது படர விட்டது ... கண்களில் மின்னல் கொஞ்சம் மழை வரும்போல் உணர்த்தியது.
எல்லோருக்கும் பெண் குழந்தை பிறப்பது அரிய விஷயம் --- பெண்ணைப்பெற்றவனுக்கு மறு பிறவி இல்லை என்று சொல்கிறது வேதம் ---
ஒரு தாய் இன்னொரு தாயை பெற்று எடுக்கிறாள் ---
குழந்தை தாயை தான் கருவாக இருக்கும் போதே உணர்ந்துகொள்கிறது ----எவ்வளவோ போராட்டங்களை பெண்ணாக பிறந்ததினால் ஒருத்தி சந்திக்க வேண்டியுள்ளது - அத்தனையையும் ஒரு பூமா தேவிபோல் பொறுத்துக்கொண்டு வெற்றி பெறுகிறாள் ----
பெண் குழந்தைக்கு சமமாக சொர்க்கம் கிட்டினும் வேண்டேன் என்று பாடினார் விஷ்ணுசித்தர் - ஆண்டாளாக பிறந்து காலங்கள் போற்றும் பொக்கிஷமாக திகழ்கிறாள் ஆண்டாள் ....
பாலா என் மகள் -- இளம் வயதில் பாண்டாசூரன் படையில் ஒரு மாணிக்கமாக ஒளி வீசினாள் ---
லலிதா சஹஸ்ரநாமத்தில் வாக்தேவிகள் அவள் சண்டை போடும் அழகை நான் மிகவும் ரசித்துப் பாராட்டினதாய் ஒரு நாமாவளியை வைத்துள்ளார்கள் - அதைத்தான் நீயும் படித்துக்கொண்டிருக்கிறாய்
பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா |
பால திரிபுரசுந்தரியை பண்டாசுரனுடன் போரிட நான் அனுப்பினேன்
தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள்.
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். என்ன சாமர்த்தியம்! என்ன வாள் வீச்சு - !!
என் அங்கத்திலிருந்து தோன்றியவள் பாலா .
ஒரு கையில் அபய முத்திரையுடன் ஜெப மாலையும்,
புத்தகம் ஏந்தி அருள் புரிகிறாள்.
பாலா என்றால் சிறுமி எனவும் பொருள்படும்.பொதுவாகவே , சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர் .தீய எண்ணங்கள் இருக்காது.
அதே போல் சிறுமியாக இருக்கும் இவளும்,பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளை தியானித்தயுடனே மனதில் பிரசன்னமாவாள்.அன்பு மழை பொழிவாள்.
நெமிலியில் வசித்த வேதவித்தகர் "சுப்பிரமணிய அய்யர் "இரவில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது அன்னை பாலா கனவில் தோன்றினாள் ."அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளையை ஏற்று ஆற்றில் வருவேன் .என்னை அழைத்து, உன் வீட்டில் அமர்த்தி கொள் "என்றாள்.
அய்யர் ஆற்றுக்கு சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையை தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் வீட்டிற்கு வந்தார்.
மறுநாளும் தேடினார்.ஏமாற்றம்தான்.பித்து பிடித்தவர் போல் ஆனார்.மூன்றாவது காலையில் ,எழும்போது நீல வானமும்,அதில் பறக்கும் பறவை கூட்டமும் நல்ல சகுனமாக தெரிந்தது.நம்பிக்கையுடன் ஆற்றுக்கு சென்றார்.
நீரில் மூழ்கி பார்த்தார். அதுவரை அவருடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய பாலா இந்த தடவை அவர் கைகளில் கிடைத்தாள்.அந்த சிலை சுண்டு விரல் அளவில் இருந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
வீடே கோவிலாக மாறியது .
தன் வீட்டிலேயே சிறுமி உருவில் இருந்த பாலாவை பிரதிஷ்டை செய்தார்.அய்யரின் வீடே கோவிலாக மாறியது .இந்த வீட்டை "பாலா பீடம்"என்று அழைக்கின்றனர் .
குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் அவர்களுக்கு பிடித்தமான மிட்டாய் பிரசாதமாக வழங்கப்படுகிறது .
சரஸ்வதியின் அம்சமாக இருப்பதால் நோட்டு புத்தகம் ,பேனா போன்ற பொருட்கள் பூஜையில் வைத்து பூஜித்தப் பிறகு மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள் .
பாலாவை வணங்குவதால் ஞாபக சக்தி உண்டாகும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் .
அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு.
பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசியான பாலா, அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள்.
லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.
இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன.
நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.
பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். இதை ‘தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல் வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது .
சிறுவனாக கண்ணனுடன் சுலபமாகப் பழக முடிந்த குசேலன், பெரியவனானதும் துவாரகை சென்று வாயிற்காப்போன் அனுமதி பெற்றுத்தான் கண்ணைக் காண முடிந்தது. ஆனால், சிறுவன் பிரஹலாதன் பேதமில்லாமல் எங்கும் நாரணனைக் கண்டதால் அவனை யாராலும் எதனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு அவர்கள் அருள் எளிதில் கிட்டும். தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ?
இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது. அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும் பற்றின்மையும் மிக மிக முக்கியம்.
அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல் ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி.
அப்பொருள் கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும். அது பற்றற்ற நிலை.
பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும். இந்த ஸ்ரீவித்யை எனும் தேவி வழிபாட்டை பெரும்பாலானோர் பாலா மந்திர உபதேசத்துடனே நிறுத்தி விடுவர். எனவே பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது. அரக்கோணத்திற்கு அருகில் உள்ள நெமிலியில் பாலா திரிபுரசுந்தரிக்கு தனி ஆலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாலாம்பிகை உபாசனை புரிபவர்களுக்கு நான் சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் தருகிறேன் .
அம்மா தன்னியனானேன் ----- பாலா திரிபுர சுந்தரியை உன்னைப்போல் வேறு யாராலும் இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியாது –
பெண் குழந்தையை பெற்றவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று உன் மூலம் புரிந்துகொண்டேன் தாயே - எல்லாமே உன் அம்சம் எல்லாமே உன் ஒருத்தியைத்தான் சொல்கிறது --- உனக்கு மீறி ஒன்றுமே இல்லை .......
வந்த பச்சைப்புடவைக்காரி ஒரு சிறுமியாக நடந்து சென்றாள் ---- அம்மா
என்றே அழைக்க முடியாத பருவம் - ஆனால் தாய்மை நிறைந்த பருவம் கருணை பொங்கும் பருவம் - விளையாடும் பருவம் - வினையானால் ஓடி வந்து விரட்டி விடும் பருவம் அவள் போவதையே பார்த்துக்கொண்டு நிண்டிருந்தேன் ---- நேரம் பறந்தது .....

Comments
Bala Tripura Sundari potri potri 👍🏻🙏🏼🙏🏼
Arumai bala tirupurasundari🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
பாலா த்ரிபுர சுந்தரியை அப்படியே கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் ரவி.
Your knowledge about Almighty is inspiring. Great feeling. God bless you Ravi
பால திரிபுர சுந்தரி பற்றிய அரிய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி... நெமிலி பாலா பற்றிய தகவல் அங்கு சென்று பார்க்கும் ஆவலை அதிகரித்து உள்ளது...அதற்கும் பாலாம்பிகை அருள் வேண்டும்...
அரிய பதிவு....புதிய பதிவு.....👏👏👏👏👏👏👏
ரவி உன் பக்திக்கு ஈடு எதுவும்
கிடையாது
கதையில் படித்திருக்கிறேன்
கற்பனை.
இப்போது நிஜமாக பார்க்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*பால திரிபுர சுந்தரி*
ஆதிசிவனும், போதி நாராயணனும், பிரம்மன் என அனைத்தும் அடக்கம் அன்னை லலிதாவிடம்
பாலாவின் அருள் இருந்தால் காலனும் கைகட்டி நிற்பான்
தொட்ட குறையுமில்லை
விட்ட குறையுமில்லை
பாலா உன்னை மனிதில் இட்ட நிறையே போதும்
அபயம் வரும்போது உபாயம் செய்யும் உமையவளே
அகிலத்தை அள்ளித்தரும் அபர்ணாவும் நீயே
கனவான பாலாவை கனவில் கண்டார் வேத வித்தகர்
கனவு வேண்டாம் கண்ணெதிரே வருகிறேன் என கட்டியம் கூறி சென்றாள் ஆயிரம் கண்ணுடையாள்
அவள் ஆயிரம் பேருடையாள்
சுப்ரபாத வேளையில் மணியோசை அதிகாலையில் பாலாவைத் தேடி குளக்கரையில் குடிகொண்டார் சுப்பிரமணிய ஐயர்
கனவில் வந்தவளை காண கடுந்தவம் கொண்டார்
அதிகாலை சூரிய இளங்காலையில் அகப்பட்டாள் அன்னை ஒருநாள்
அதுவே அவர் வாழ்வில் திருநாள்
சுண்டுவிரல் அளவு சுந்தரியாய் சிரித்தாள்
தன் அகத்தையும்(உள்ளம்) அகத்தையும்(வீடு) ஆலயமாய் அலங்கரித்தார்
உங்களுக்கு எப்போதும் பச்சைப் புடவைக்காரியாக காட்சி தரும் அவள் இன்று பச்சை பட்டு பாவாடை கட்டிய பச்சிளம் குழந்தையாய் கும்மாளம் போடுகிறாள் உங்களோடு
உங்களுக்கு அவள் அன்னையானால் இன்று... குழந்தையாய் மாறினாள்...🙎♀️🙎♀️🦜🦜