பச்சைப்புடவைக்காரி - எச்சில் அங்கே அமுதமானது
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
எச்சில் அங்கே அமுதமானது
அம்மா ராமாயணத்தில் தாங்கள் விளக்கமாக சொன்ன பின் எல்லா பாத்திரங்களையும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது --- என் மனதை மிகவும் கவர்ந்தவர்களில் சபரியும் ஒருத்தி --
எனக்காக இவளுடைய பக்தியை சரணாகதியை , ராமனின் மீது இவள் வைத்த பிரேமையை அடியேனுக்கு சொல்ல முடியுமா தாயே ? உங்கள் வர்ணனையில் சபரிக்கும் இதனால் கூடுதலாக புண்ணியம் சேரட்டும்
ரவி சொல்கிறேன் --- பக்தி என்பது முதல் படி , சரணாகதி என்பது கடைசி படி - அதற்கப்புறம் படிக்கட்டுக்கள் கிடையாது --- இறைவனின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் ...... சபரி நின்று கொண்டிருந்தது கடைசி படியில் - வைகுண்ட கதவுகள் திறக்கவேண்டி ......
அந்த காட்சியைப்பார் ---
“ராம்... ராம்... ராம்... ராம்... ராம்...”
வனமெங்கும் பரவியது அந்த நாமம். மரங்கள் அசைவற்று நின்றன. காற்று குளுமையாக வீசியது. பறவைகள் பறப்பதை நிறுத்தி விட்டு கிளைகளில் அமர்ந்து, ராம நாமத்தை செவி குளிரக் கேட்டன.
குருதிச் சாக்கடையாக ஓடும் பம்பா நதியும் கூட, நிலைத்து நின்று சபரியின் ராம நாமத்தை கேட்டு ஆனந்தம் அடைந்தது. மலைகளின் உச்சிகள் அந்த நாமத்தை விண்ணுலகத்திற்கு எடுத்துச் சென்றன. காற்றில் அலை அலையாகப் பரவிய ராம நாமம், அந்த வனப் பகுதி எங்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
சிறிது தூரத்தில் இளவலுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீராமனின் செவிகளிலும் அந்த நாமம் விழுந்தது. அவர் புன்னகையுடன் ஒரு சில நொடிகள் அந்த நாமத்தை உள்வாங்கினார்.
ராமன் அசைவற்று நிற்பதைக் கண்டு, “என்ன அண்ணா?” என்றபடி லட்சுமணன் பரபரப்புடன் அருகில் வந்தான்.
“அருகில் மதங்க முனிவரின் ஆசிரமம் உள்ளது. அங்கு போகலாம்.”
ராமனின் சொல்லுக்கு எதிர்ப் பதம் என்ன இருக்கிறது.
இருவரும் அந்த ஆசிரமம் நோக்கி நடந்தனர். மதங்க முனிவர் இல்லாத போதும், ஆசிரமம் தூய்மையாகவே இருந்தது. சுற்றிலும் மரங்கள், வண்ண மலர்த் தோட்டங்கள். அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கி அந்த இடம் எங்கும் நறுமணம் பரவி இருந்தது. ஒரு வேப்ப மரத்தின் கீழ், கற்பாறையில் சபரி அமர்ந்திருந்தாள்.
தொலைவில் ஆசிரமத்தில் முனிவர்கள், பெண்கள் தங்கள் பணியில் ஆழ்ந்திருக்க, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து விட்டு தனிமையில் வந்து ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்திருந்தார் சபரி. முதிர்ந்த, பழுத்த பழம் போன்ற உருவம். தலையின் முன்புறம் முடி உதிர்ந்து, நரைத்து வெள்ளிச் சொம்பாக இருந்தது.
அந்த முகம் முழுதும் பரவி இருந்த சாந்தம், அமைதி அவருக்கு ஒரு தெய்வீக தோற்றத்தைத் தந்திருந்தது. பெண் துறவி போன்ற தோற்றம். உடல் ஆசை, உருவத்தின் மீதான பற்று, வாழ்வியல் பொருட்கள் மீதான ஈர்ப்பு அகன்று ராம நாம ஜெபத்திலேயே தன்னை முழுதாக ஆட்படுத்தியிருந்தாள்.
‘வருவான், ராமன் தனக்கு அனுக்கிரகம் செய்ய வருவான்’ என்ற ஒன்று மட்டுமே சபரியின் மனதில் ஆழ வேரூன்றி இருந்தது.
வேட்டுவக் குலத்தில் பிறந்த சபரியின் மனதில் கருணையும், அன்பும் நிறைந்திருந்தது. தன் திருமணத்திற்காக மிருகங்களைக் கொன்று உணவு சமைப்பதை பார்க்கப் பொறுக்காமல், “எனக்கு திருமணமே வேண்டாம்” என்று வீட்டை விட்டு வெளியேறியவர்.
மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார்.
மதங்க முனிவர், சபரிக்கு பல நல்ல உபதேசங்களைச் செய்தார். தன் சீடர்களுடன் அவர் விண்ணுலகம் செல்லும்போது, “அம்மா சபரி.. பூவுலக பாரம் தீர்க்க மகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதாரம் செய்யப் போகிறார். அவர் சீதையைத் தேடிச் செல்லும் வழியில் இங்கு வருவார். நீ அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அதன்பின் விண்ணுலகம் வரலாம்” என்று கூறியிருந்தார்.
அது முதலே, “என்று வருவான் ராமன். கண்ணின் கருமணி போன்ற அவனை என்று கண்டு பிறவிப் பயன் எய்துவேன்” என ஏங்கியவளாக, ராமநாமத்தை ஜெபித்தபடி நாட்களைக் கழிக்கத் தொடங்கியிருந்தாள் சபரி.
அவள் இங்கு இருப்பதை சில முனிவர்கள் விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண், அங்கு இருப்பதை வெறுத்தனர்.
அதில் ஒரு முனிவர் பம்பா நதியில் குளித்து விட்டு வரும்போது, ஆசிரமத்துக்கு நீர் எடுக்க வந்த சபரியின் கை தவறுதலாக அவர் மேல் பட்டுவிட்டது.
வெகுண்ட முனிவர் அவளை வெகுவாகக் கடிந்து கொண்டார்; தூற்றினார்.
‘மீண்டும் ஆற்றில் இறங்கி குளித்தால்தான் தீட்டு போகும்’ என்று பம்பா நதியில் இறங்கினார். அந்த நிமிடம் பம்பா நதி, குருதிச் சாக்கடையாக மாறி, புழுக்கள் நெளிய ஆரம்பித்து விட்டது. இன்று வரை அதை யாரும் பயன்படுத்தவில்லை.
சபரி ‘அனைத்தும் ராமன் வருகையால் மாறும்’ என்று காத்திருந்தாள்.
வீடெங்கும் சிதறிக்கிடந்தன சபரி பறித்த பழங்கள் - உடைந்த குடிசை , உள்ளே திமிறிக்கொண்டு வரும் சூரியனின் கதிர்களை தாங்க முடியாமல் தவித்தது அந்த குடிசை.
குடிசையில் உள்ளிருந்தே முழுமையாக எண்ணக்கூடிய நட்சத்திரங்கள் ஓவ்வொன்றயும் ராமனாக நினைத்து எண்ணிக்கொண்டிருந்தாள் சபரி -
வழி மேல் விழி வைத்தவளின் நாழியை அங்கே காலன் எண்ணிக்கொண்டிருந்தான் -
கண்ணை மூடும் முன் தன் மனம் கவர்ந்த மன்னனை , ஈடில்லா அழகனை , எண்ணிக்கொண்டிருக்கும் ராமனை எண்ணங்களில் வைத்து அதற்கு தன் கண்ணீரை அபிஷேகமாக பண்ணிக்கொண்டிருந்தால் சபரி ----
ராமா! ராமா! நான் கூப்பிட்டும் நீ வரவில்லை என்றால் எனக்கொன்றும் குறை இல்லை ஆனால் எல்லோரும் நீ கருணை அற்றவன் என்று சொல்லிவிடுவார்கள் ராமா!
உனக்கு வரும் அந்த கெட்டப்பெயரை நான் எப்படி பொறுத்துக்கொள்வேன்?? ---
ஒரு முறை, ஒரே ஒரு முறை உன் தாமரை முகத்தைக்காட்டு ராமா, என் கையால் உனக்கு அமுது படைக்கவேண்டும் ... அதற்குப்பிறகு உன் மடியில் என் உயிர் பிரிய வேண்டும் ----
இரவு தவழ்ந்துகொண்டு பகல் என்னும் தன் தாயைத் தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்தது --
சபரியின் கண்கள் மங்கின - வரும் சுவாசக்காற்று நிறுத்திக்கொள்ளட்டுமா, உன் ராமன் வருவதாக இல்லை என்று கேட்டுக் கொண்டிருந்தது ---
காதுகள் மட்டும் ராமன் வரும் பாதையில் காலடி சுவடிகளின் சப்தத்தை கேட்பதற்காக தங்களின் வலிமையை இழக்காமல் இருந்தன ---
அதோ அழகர் வந்துவிட்டான் --- தாரக மந்திரமான ராம நாமத்தை சுமந்துகொண்டு -- ஜெகஜோதியுடன் ஒரு அண்ணாமலை தீபம் சபரியின் குடிசையில் நுழைந்தது , லக்ஷ்மணனோடு.
ராமா! ராமா! நீ வந்துவிட்டாயா? இந்த கிழவியை பார்க்க ஏன் ராமா 12 வருடங்கள் எடுத்துக்கொண்டாய்?
நான் இவ்வளவு காலங்கள் இந்த உலகில் வாழவேண்டியவளே இல்லை ----
மனம் தான் ராமருடன் பேசியது ....
ராமர் "அம்மா சபரி நான் தான் நீ தேடிய ராமன்! இது என் தம்பி லக்ஷ்மணன் --- பசிக்கிறது தாயே!
ஆனால் சபரிக்கு தான் வார்த்தைகளே வரவில்லை. ராமனைக் கண்டவுடன் பேச்சு மறந்து, பரவசத்தில் கண்ணீர் வழிய, விரல்கள் நடுங்க “ரா.. ராம்.. மா..” என்று குழறியது.
தள்ளாடியபடி எங்கோ ஓடினாள். ஆனால் எதற்காக என்பது மறந்து போய் மீண்டும் திரும்பி வந்தார். ஸ்ரீராமனின் முகத்தையே பார்த்தபடி மெய் மறந்து நின்றார். மலர்களை அள்ளி, அள்ளி, ராம-லட்சுமணர்கள் மீது வீசினாள்.
ஏதாவது உன் கையினால் கொடு ----- துடித்துப்போனாள் சபரி!
இந்த உலகிற்கே படியளப்பவன் தன்னிடம் பசிக்கின்றது என்று கேட்க்கிறானே!!!
பகவானை நேரில் தரிஸித்ததும், சபரிக்கு பேச்சே எழவில்லை. மௌனியாக, பக்தி பரவஸத்தோடும், அன்பு மேலீட்டாலும் சபரி ராமருக்கு பழங்களை தந்தாள்.
ஒவ்வொரு பழமாகப் பார்த்து - இந்த பழம் என் ராமனுக்கு வேண்டாம் -- இது நன்றாக இருக்கும் - சொல்லிக்கொண்டே கடித்த பழங்களை இருவருக்கும் கொடுத்தாள் -
தன் தடுமாறும் கரங்களினால் ராமரின் தலைமுடியை கோதிவிட்டாள் -
இத்தனை வருடங்கள் அடங்கி கிடந்த அவள் தாய் பாசம் அங்கே ராமரையும் லக்ஷ்மணனையும் குளிப்பாட்டியது ...
ஸ்ரீராம பிரானும் அந்த எளியவளின் சிறிய குடிசையில் கீழே தரையில் அமர்ந்து, அவள் அளித்த பழங்களை சாப்பிட்டாள்.
சபரியின் கையால் கனிகளை உண்டபின்பு, இராமர் கூறுவதாக துளசிதாசர் வர்ணிப்பதாவது: “என் அரண்மனை, குருகுலவாசம் புரிந்த ஆசிரமம், நண்பர்களின் இல்லம், ஜனக மகாராஜாவின் மாளிகை இங்கெல்லாம் விருந்து உண்டிருக்கிறேன். ஆனால் சபரி அளித்த கனிகளின் சுவைக்கு எதுவும் இணையில்லை.” என்று இராமர் கூறினாராம்.
“தாயே, உனக்கு என்ன வேண்டும் கேள்.”
“முதற்பொருளே, முழுப் பொருளே.. உன்னைச் சந்தித்த பாக்கியத்தை விட வேறு என்ன வேண்டும்?” - மனம் நெகிழப் பேசினார் சபரி.
“இல்லை தாயே. உன் அன்புக்கு நான் பிரதி செய்ய வேண்டும். ஏதாவது கேள்.”
சபரி தயங்கியபடி, “இறைவா, இந்த பம்பா நதி, குருதிச் சாக்கடையாக இருக்கிறது. இதை நீக்க வேண்டும். ஆசிரமத்து முனிவர்களுக்கு பயன்படும்படி தூய்மையான நதியாக அது மாற வேண்டும்.” சபரியின் வார்த்தையின் பம்பா நதியின் நிலை குறித்த வருத்தம் வெளிப்பட்டது.
“தாயே, இதற்கு நான் தேவையில்லை. தாங்களே இதில் இறங்குங்கள். உங்களது பாதம் அந்த நீரில் பட்டாலே போதும், நீரின் மாசு நீங்கிவிடும். மனிதரில் ஜாதியால் உயர்வு, தாழ்வு இல்லை. ஒருவரை ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்தக்கூடாது. தங்களை விட தூய்மையானவர் இங்கு யார் இருக்கிறார்?”
ராமன் வற்புறுத்த “ராமா, ராமா” என்று உச்சரித்தபடி சபரி ஆற்றில் இறங்கினார்.
அவர் பாதம்பட்ட அந்த நொடி, நதி தூய்மையானது. குருதி, புழுக்கள் மறைந்து, வெள்ளியை உருக்கி விட்டதுபோல் ஓடியது பம்பா நதி.
“ராமா உன் மகத்துவம்தான் எத்தகையது?” வியந்து போற்றினாள் சபரி.
“இது என் மகத்துவம் இல்லை தாயே. உங்களுடைய ஆழ்ந்த பக்தி, நம்பிக்கை, பொறுமை, இவையே காரணம். இதுநாள் வரை தங்களைத் தூற்றிய முனிவர்களை நீங்கள் கடிந்து கொள்ளவில்லை. இந்த நதி அவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஜாதியை விட, நல்ல மனமே உயர்ந்தது.”
பரவசத்துடன் ராமனை கையெடுத்துக் கும்பிட்டாள் சபரி.
“தாயே, என் மனைவி சீதையை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்று விட்டான். அவளைத் தேடிக் கொண்டு வரும் வழியில் கவந்தனின் வதம் நிகழ்ந்தது. அவன்தான், ‘மதங்க முனிவரின் ஆசிரமத்தில் சபரி அல்லும் பகலும் உன் நாமத்தையே ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். சீதையைத் தேட உங்களுக்குத் துணை தேவை. எனவே அவளைச் சந்தியுங்கள்’ என்றான். அதன்படியே தங்கள் தரிசனம் கிடைத்து விட்டது”
ராமனின் பணிவான பேச்சில் மகிழ்ந்த சபரி, கிஷ்கிந்தைக்குச் செல்லும் வழியைக் கூறியதுடன், அங்கிருக்கும் சுக்ரீவனுடன் நட்பு கொள்ளும் வழிமுறைகளையும், பயணத்திற்குரிய வழிகளையும் கூறினாள்.
ஒரு நல்லாசிரியன் கூறுவதைக் கேட்கும் மாணவன் போல் ராமன் அதைக் காது கொடுத்துக் கேட்டான்.
ராம தரிசனம் பெற்ற மகிழ்ச்சியில் சபரி இந்த உலக வாழ்வை உதிர்க்க நினைத்தார். பல்லாண்டுகள் ராம நாமத்தைச் ஜெபித்து யோகப் பயிற்சி பெற்ற சபரி, அந்த நெறியின் பயனால் யோகக் கனல் மூட்டி, அதில் தன் உடலைத் துறந்து விஷ்ணு லோகம் சென்றாள்..
“தாயே” என்று ராமனால் அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் சபரி. ஜாதியால் உயர்வு இல்லை என்று ராமனால் போற்றப்பட்டவர். அவர் இருந்த மலையே ‘சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத பக்திக்கு உதாரணம் சபரி.
பகவானை பார்த்துக் கொண்டே, அவரை சாக்ஷியாக வைத்துக் கொண்டு, சபரி முக்தியடைந்தாள். பூதவுடல் அக்னியில் மறைந்த பின்பு சபரி, மிகவும் பிரகாசமான திவ்ய வடிவுடன் அக்னியிலிருந்து வெளியேறினாள். அவள் மேனியில் ஆபரணங்கள் ஜொலித்தன.
மாலைகள் அணிந்து, சந்தனம் பூசியிருந்தாள். அழகான உடையணிந்து மின்னலைப் போல, பரமபதத்தை அடைந்தாள். அங்கே தன் ஆசார்யர்களாக விளங்கும் புண்ணியாத்மாக்களுக்கு என்றென்றும் சேவை புரிவதற்காகவே சபரி அழிவற்ற புண்ணியலோகம் சென்றாள்...
ராமரை மறந்துபோனாலும் ராமாயணத்தில் சபரியை மறக்கவே முடியாது -
எதையும் கேட்கவில்லை - அவளுக்கு எல்லாமே கிடைத்தது --- எதிலும் ஆசை இல்லை -- ஆசை அற்றவன் கைகளினால் அவள் காரியங்கள் நடந்தன - காத்திருந்தாள் ராமனை காண பன்னிரண்டு வருடங்கள் ---
ஆனால் கிடைத்ததோ பல்லாயிரம், பலகோடி ஆண்டுகள் காத்திருந்தாலும் கிடைக்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் - அங்கு அனுப்பியவன் யார் ?? அங்கு என்றும் உறைபவன்!!!
அம்மா தங்களால் மட்டுமே இப்படி வர்ணிக்க முடியும் - என்ன பக்தி தாயே !! புல்லரிக்கிறது ......இப்படி பல மகான்களின் கதைகளை தங்கள் மூலம் கேட்கும் போது -- என் மீதே எனக்கு வெறுப்பு வருகின்றது ---
எங்கள் பக்தி மூலாதாரத்தில் குண்டலினியை நீலாம்பரி ராகத்தில் தாலாட்டி தூங்க வைக்கும் பக்தி .... வெட்கமாய் இருக்கிறது தாயே .....
பக்தி, சரணாகதி என்பது ஒருவர் செய்ததைப்போலவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ரவி ---- அன்பு மாறாமல் நடந்துகொள் , யாரையும் வெறுக்காதே --- கடின சொற்கள் வேண்டாம் , முடிந்த உதவிகளை பிறர் கேட்க்கும் முன்னமேயே செய் , முடிந்த நேரத்தில் இறைவனை நினை --- இதுவும் பக்தியின் உச்சம் தான்
அன்னை போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன் - எச்சில் என்பது பழத்தில் இல்லை நம் மனதில் எழும் அழுக்கு எண்ணங்களில் மட்டுமே எச்சல் நிறைந்து இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்
Comments
அருமை
சபரிமலை அற்புதம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிற்பாய் போற்றி நடப்பாய் போற்றி நினைவில் கலந்தாய் போற்றி
வேதமே போற்றி வேத நாயகனே போற்றி வேதத்தின் வித்தே போற்றி
வேழமே போற்றி சுவாமிநாதனே போற்றி .. கருக்குள் உயிராய் இருப்பாய் போற்றி . கரும் இருளை நீக்கி ஞானம் தரும் காஞ்சீயே போற்றி போற்றி !!👌👌👌
கன்னங்களில் ஓடும் பாலாறு அது கருணையை கொஞ்சமும் குறைப்பதில்லை
உதடுகளில் தவழும் பவழங்கள் புன்னகை அதை சிந்துவதை விடுவதில்லை
கண்களுக்குள் இருக்கும் காரூண்யம் அது கருமை என்றும் தேடுவதில்லை
உயர்ந்து வளர்ந்து ஓங்கி நிற்கும் கரங்கள் உதவி தர மறப்பதில்லை
கிழிந்து வளர்ந்த ஆடைகள் அவை அருளை கொட்டுவதை நிறுத்துவதில்லை ...
நினைத்த மாத்திரத்தில் ஷீரடி என்றும் முக்தி தர மறுத்ததில்லை ... 🥇🥇🥇
வணங்குகிறேன் ஐயா🙏
மகர் சபரீகே தரஹ் கோயி கிலாதே நஹி "
என்பதே உண்மை. PP வாயிலாக சபரியை
பெருமை படுத்திவிட்டீர்கள்.அருமை
அன்பு மாறாமல் நடந்துகொள் , யாரையும் வெறுக்காதே --- கடின சொற்கள் வேண்டாம் , முடிந்த உதவிகளை பிறர் கேட்க்கும் முன்னமேயே செய் , முடிந்த நேரத்தில் இறைவனை நினை.....Nice advice.ராம்... ராம்... ராம்... ராம்... ராம்
God bless
உலகம் அறியாதவள் ... பிறர் உயிரில் அதிகம் கவனம் கொண்டவள் ...
அன்று ஒரு நாள் ... அன்னை மடி மேல் படுத்திருந்தேன் ... உறக்கம் கலைக்கவே வந்தான் காக்காசுரன்...
எழுப்ப மனம் இல்லை .. வேதனையிலும் என்னை கோதிக்கொண்டிருந்தாள் ...
விட்ட தர்ப்பை அவனை விரட்டி அவள் பாதங்கள் விழ வைத்தது ...
தடவி கொடுத்தே அதை பறக்க விட்டாள் அந்த பெண் தாமரை ....
தனித்திருந்தோம் அந்த நிலவில் ...
மேகங்கள் கை கொண்டு மூட விண்மீன்கள் விரல் கொண்டு வீணை வாசிக்க ,
எல்லாம் உறங்கும் நேரம் எங்கள் உதடுகள் உறங்க வில்லை ...
கன்னங்கள் மெத்தையாக கரங்கள் காவல் காக்க இருவர் ஒருவரானோம் ... இதையும் சொல் ஆஞ்சநேயா என் இதயத்திடம் இதமாக ....🍇🍇🍇
அது அவருக்கானாலும்
அடுத்தவருக்கானாலும்
தேன்சுவை கொண்ட ராமநாமம் தீண்டாத நாவுடையவனே தீண்டத்தகாதவர்கள்
அவர்களை தொட்டாலும், தொடர்ந்தாலும் தீட்டு
ஜகத்ரட்சகனுக்கு ஜெகமே அகம்
அதில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை
ராமனைக் காணும் கனமே உண்மையான சொர்க்கம் , வைகுண்டம் என விழியெல்லாம் ராமனின் மொழியோடு அவன் வரும் நாழி நாடி ....வழி மீது விழி வைத்து ....நாடி பிடித்து நாட்களை நகர்த்தினாள் சபரி
அவளுக்கு இகபர சுகமெல்லாம் உபரி
நரை விழந்த தலை தரை விழுமுன் இராமனைக் கண்டு கரை சேர துடித்தாள்
வந்தான் இராமன்
தந்தான் தன்னை பிள்ளையாய்
உலகத்துக்கே படி அளப்பவன் அவளிடம் ஒரு பிடி உணவு கேட்டான்
கனவாய் நினைத்த இராமன் கண்முன்னே கடவுளாய் கண்டவுடன்
கல்லாய் மாறினாள்.
கடித்து கொடுத்த கனிதான்
இராமன் என பிடித்துக் கொடுத்தாள்
சுவை உணவில் இல்லை உணர்வில் என
உணர்ந்தான் ராமன்
உணர்த்தினான் இராமன்
சபரிக்கு மோட்சம் வைகுண்டமா , இராமனின் தரிசனமா?
இராமனின் கரிசனமா?
இல்லை...
இராம நாமமா...
தெரியவில்லை எனக்கு தெளியவில்லை🏹🏹
உணர்ந்தான் இராமன்
உணர்த்தினான் இராமன்
ஆகா ஆகா