பச்சைப்புடவைக்காரி - ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி
கம்ப ராமாயணம் படித்துக்கொண்டிருந்தேன் ... பச்சைப்புடவைக்காரி அருகில் அமர்ந்ததையும் கவனிக்காமல் - எனக்கு நானே பேசிக்கொள்வதை அன்னை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள்
இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார்.
வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான்
பொருள்
வெயர்த்த மேனியன்; = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை
விழி பொழி மழையன்; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன
மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை
செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன்
தெருமரல் = மன மயக்கத்தால்
உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான்
அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும்
தென் திசை அன்றி = தென் திசை அல்லாது
வேறு அறியான் = வேறு திசை ஒன்றையும் அறிய மாட்டான்
பயத்த = பயத்துடன் கூடிய
துன்பமே = துன்பமே
உருவு கொண்டென்னலாம் = உருவமாக உள்ளவன் என்று சொல்லலாம்
படியான் = அப்படி இருந்தான்
என்னப்பா --- கம்ப ராமாயணம் தேனாக இனிக்கிறதா ?
அம்மா தாங்களா ? தாயே - தாங்கள் வந்ததை கவனிக்க வில்லை
பரவாயில்லை சும்மா இல்லாமல் ராமாயணத்தைத்தானே புரட்டிக்கொண்டிருந்தாய் .......
சீதை ,ஊர்மிளா மாண்டவி ,சுருதகிருதி இவர்களது தியாகங்கள் அதிகம் பேசப்படுவதில்லை ஆனால் இவர்கள் அனைவரையும் பெண் தெய்வங்கள் என்று புகழும் படி இவர்களது தியாகங்கள் இவர்களை உயர்வடைய செய்தன
.... இனி ராமனின் தம்பி மார்களை பார்ப்போம்
இராமனை காட்டுக்குப்போ என்றாள் கைகேயி.
இலக்குவனை கூடப்போ என்று யாரும் சொல்லவில்லை. அண்ணன் கூட அவனும் கிளம்பி விட்டான்.
சரி, அவர்கள்தான் போனார்கள், பரதன் என்ன செய்தான்?
உங்களது நெருங்கிய உறவினர் யாரவது இறந்து விட்டால் கூட, ஓரிரண்டு வருடம் துக்கம் நீங்கள் காப்பீர்கள் , அப்புறம் நாளடைவில் அது மறைந்து விடும்.
பரதன், 14 வருடம் அண்ணனை நினைத்து தவம் இருக்கிறான், நந்தியம்பதி என்ற கிராமத்தில். அரண்மனை சுகம் அனைத்தையும் விட்டு விட்டு அண்ணணனை நினைத்து ஏங்கி நிற்கிறான்.
உங்களால் , நினைத்துப் பார்க்க முடியுமா ?
அப்படி ஒரு சகோதர பாசமா?
மனைவியை விட்டு விட்டு இலக்குவன் போனான்.
மனைவியை விட்டு விட்டு பரதன் ஊருக்கு வெளியே கிராமத்தில் இருந்தான்.
சரி, இலக்குவன் போனான். பரதன் போனான். சத்ருகன் என்ன செய்தான்?
அவனும் அரண்மனையை துறந்து, பரதன் கூடவே இருந்தான்.
சகோதரர்கள் இடையே இப்படி ஒரு பாசத்தை காண முடியுமா ?
ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் கூட இல்லை. மாற்றாந்தாய் மக்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு பாசமா?
தசரதனுக்கு தன் குலம் விளங்க ஒரு வாரிசு இல்லையே என மனக்கவலை உண்டு. பல தெய்வங்களையும் வணங்கி, பல யாகங்களையும் ஒரு பிள்ளையை வேண்டி செய்தார். அதன் பலனாய் அவருக்கு ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னால் ஒரு வாழ்வியல் தத்துவம் உண்டு
தர்மம் நான்கு வகைப்படும். அதில் முதலாவது சாமான்ய தர்மம்.
பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களை ராமன் தானே பின்பற்றி உலகுக்கு எடுத்துக் காட்டினான்.
இரண்டாவது சேஷதர்மம்.
சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துக்கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் நிரந்தரம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றி லட்சுமணன் நடந்து காட்டினான் .
மூன்றாவது விசேஷ தர்மம் தூரத்தில் இருந்துக்கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
நான்காவது விசேஷதர தர்மம் பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம். சத்ருகன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக, இந்த நான்கு தர்மங்களையும் இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
உனக்குத் தெரியுமா ரவி ?
கேரளாவில் ஆடி மாதம், 'ஆன்மிக மாதமாக' கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஆடி மாதத்தை, 'ராமாயண மாதம்' என்றே கேரள மக்கள் அழைக்கிறார்கள். இங்கு சகோதரர் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன் ஆகிய நான்கு பேருக்கும் தனித்தனியே கோயில்கள் எழுப்பி, மக்கள் வழிபட்டு வருகின்றனர். அத்துடன் ஆடி மாத்தில், ஒரே நாளில் நான்கு கோயிலுக்கும் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், குடும்பத்தில் சகோதரத்துவ பாசம் நீடித்து நிலைக்கும் என்பது ஐதீகம்.
அம்மா உங்களிடம் விளக்கம் கேட்ட பிறகு ராமாயணத்தை முழுவதும் கரைத்து குடித்ததைப்போன்ற ஒரு உணர்வு தாயே --- உங்களுக்கு நான் எவ்வளவு யுகங்கள் எடுத்தாலும் என் நன்றியை சொல்லி மாளாது
சிரித்துக்கொண்டே சிங்காரமாய் மங்கை நடந்தாள் மாணிக்க மூக்குத்தி ராமாயணத்தில் நான்கு சகோதரிகளும் சகோதரர்களும் செய்த தியங்கங்கள் போல் ஜொலித்தது
Comments
மந்திரங்கள் சூழ்ந்த நாமம் ... மறு பிறவி இல்லா வரம் தரும் நாமம் ...
வந்தோரை வாழ வைக்கும் நாமம் . வராதோரை வலிய இழுக்கும் நாமம்
புவியில் ஈடில்லா நாமம் ... பூமியை புண்ணியமாக்கும் நாமம் ..
பொம்மை வாழ்க்கையை புனிதமாக்கும் நாமம் ..
புரிந்து கொண்டோர்க்கு முக்தி கொடுக்கும் நாமம் ..
சுவாமிநாதன் நாமம் ... சுகம் தரும் நாமம் ...
ராம நாமத்தை மிஞ்சும் நாமம் ..
நவில்வோர்க்கு மட்டுமே உண்மை புரிய வைக்கும் நாமம் .... 💫💫💫
மாணிக்க மகுடங்கள் தேவையில்லை ... தேன் பட்டு சிம்மாசனகங்கள் வாய்ப்பு இல்லை
ஏழைக்கும் ஒரு கடவுள் உண்டு என்றால் அது நீயன்றோ ... மன ஏழைக்கும் நீ ஒரு மருந்தன்றோ ...
ராமன் போல் வாழ்ந்து காட்டினாய் .. கிருஷ்ணன் போல் கீதை சொன்னாய் ...
நாங்கள் காண்டீபம் நழுவ விட்டோம் தன்னம்பிக்கை எனும் வழி மறந்தோம் ...
நீயன்றோ எங்கள் சாரதி ... நெறி காட்டும் மாருதி ...
நெற்றி மண்ணில் புதையும் முன் நெடுஞ்சானாக விழுகின்றோம் உன் பாதமதில் ...
உன் பாதத்துளிகள் பட்டதுமே அயன் எழுத்தும் அழிந்து போகும் மாயமென்ன ? 💐💐💐
சகோதர பாசம்
ஆஹா அருமை🙏🏻
கரும்பு ___தின்ன கூலி
அற்புதமான இறைத்தொண்டு👌👌🙏
ராமாயண மாதம் in Kerala-becoming aware of it only now
சகோதர பாசம்-அருமை
God bless
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் 🙏🙏
தகுதியில்லாதவர்களுக்கு பச்சைப்புடவைக்காரி எதையும் தருவதில்லை,கஷ்டமாக இருந்தாலும்.அவளை நம்புபவர்களைக் கைவிடுவதுமில்லை.
அவளுடைய ஆசிர்வாதம் தங்களுக்குபரிபூரணமாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி ஐயா. தாய்க்கும் நன்றி 🙏தங்களையும், தங்களது பதிவுகளையும் நம் குழுவிற்கு தந்தமைக்கு 🙏🙏
என்ன சௌந்தர்யம் எத்தனை அமைதி முகத்தில் ...
ரம்பை ஊர்வசி பார்த்ததில்லை ...
இதோ பார்த்துவிட்டேன் பிரமன் வடித்த ஒரு பொற் சிலையை ...
ஒரு நிமிடம் அனுமன் அங்கே சற்றே தடுமாறினான் ..
சொல்லும் நாமம் அவனை தூக்கி நிறுத்தியது ...
சீ சீ என்ன எண்ணங்கள் .. எடுபடா எண்ணங்கள் ..
அன்னை இங்கே அழகாய் உறங்க அரக்கன் அவன் மஞ்சம் அருகில் இருக்க எடுப்பார் கைப் பிள்ளையோ சீதை பிராட்டி ..
அழுக்கு எண்ணம் எப்படி வந்தது ..
நினைக்கத் தெரிந்த மனமே என் நினைப்பை கொஞ்சம் மறந்துவிட்டு என்றே கெஞ்சினான் கேசரி நந்தன் ⭐⭐⭐
நான்கு சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் பாசம் / ஒற்றுமையை காணமுடிந்தது .
அருமையான செய்திகளின் தொகுப்பு.
இன்று பாலும் பழமும் தந்து இருக்கிறீர்கள்💐💐🙏
சகோதரப் பாசம் என்பது முழுமையான மரம் போன்றது
அதில்
*பூவும் கனியும்*- இராமனைப் போல் வாசம் தரும்
இராமா என சுவைத்தால் சுவை சுயத்தைத் தரும்.
பெற்றவனுக்கு உற்றவனாய்,
தர்மம் கற்றவனாய்
பெற்றவர்களுக்கு செய்யும் சேவையில் குறை அற்றவனாய்
மொத்தத்தில் நிறை உற்றவனாய்
பிள்ளைக் கனியமுதாய் கடமை செய்வதே
*சாமான்ய தர்மம்*
அதுதான் இராமன்
காம்பு* - இலக்குவனைப் போல இரவும் பகலும் தாங்கும்
இறைவனை இதயத்தில் இருத்தி
ஆண்டவனே அனைத்தும் என மனம் திருத்தி
அவனுக்காக உடலையும் உள்ளத்தையும் வருத்தி
தன் ஆன்மீக பலத்தை செய்வான் விருத்தி
இதுதான் *சேஷதர்மம்*.
இலக்குவன் இயம்பிய தர்மம்
தண்டு* - பரதனைப் போல உடலிலும் உள்ளத்திலும் இராமன் எனும் நீராய் ஒடும்
மரம் எனும் மனம் முழுதும் ஆறாய் ஓடும்
கடவுளை காணமுடியாது
அவனுக்கு சேவை பேணமுடியாது
இருப்பினும்
கனத்த இதயத்தால் கண்ணார கண்டு களிப்பான்
அவன் நாமம் உண்டு திளைப்பான்
இறைவனோடு இதயத்தால் பூஜை செய்து களிப்பான்
அது இறையை தம் பக்திக்கு இரையாக்கும் முறையே *விசேஷதர்மம்*
பரதனின் பக்குவம் பகர்ந்ததும் அதுவே
*வேர்* - சத்ருக்கனைப் போல அனைத்தையும் ஆராதிக்கும்
அனைத்தையும் அன்னைப் போல் காக்கும்
இறைவனை தொழுவதற்கு
இறை அடியாரை தொழுவதே தொடக்கம்
இறை அடியார்களே இறைவனை இணைக்கும் படியார்கள்
இணைக்கும் படியானவர்கள்
அவர்களே ஆன்மீக படியளப்பவர்கள்
என படிப்பினை சொல்வது
*விசேஷதர தர்மம்*
சத்ருக்கனன் சத்தமில்லாமல் செய்ததும் இதுவே
இராமன் தர்மம் எனும் கனி தந்தான்
இலக்குவன் இராமன் எனும் கனி காத்தான்
பரதன் அதற்கு பக்தி எனும் நீரேற்றி பணி செய்தான்
சத்ருக்கனன் அனைத்துக்கும் ஆதரவாய் ஆதாரமாய் நின்றான்
வாசமுள்ள பூவோ
ருசியுள்ள கனியோ
கைக்கு வர
காம்பும்
தண்டும்
வேரும்
வேலை செய்ய வேண்டும்
*இராமன் எனும்*
கனியை நாம் கண்டது
இலக்குவன்
பரதன்
சத்ருக்கனன்
எனும் மூவரின் தியாகத்தால் முளைத்ததே
*இப்படி புரிந்தது எனக்கு*
விசேஷதர தர்மம் மலையானது
விசேஷதர்மம் இதயத்திற்கு நிலையானது
சேஷதர்மம் இறைவனுக்கு துணையானது
சாமான்ய தர்மமோ இதற்கெல்லாம் தலையானது
ஆண்டவன் அருளுக்கு நாம் தர வேண்டிய விலையானது
பெற்றவர்களைப் போற்றினால்
கடவளும் கை காட்டி வழி காட்டுவான்
நமக்கு நன்மை கூட்டுவான்
காரணம்
நம்மை பெற்றவரும்
நாரயணணும் ஒன்றே
புரித்தால் நடக்கும் நன்றே
அதுவும் இன்றே
Glad your PP write up will reach the century mark on 02.07.2020 .
Great achievement Ravi.
God bless you.