சிவானந்தலஹரி-30-‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்
வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா
க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।
பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே
ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
முந்தின ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’னு சொன்னார்.
அங்க ‘லோககுரு’ங்கிறார். இங்க ‘த்ரிலோகீகு³ரோ’ – மூவுலகத்துக்குமே நீதான் குரு என்கிறார். ‘பா³லேந்து³ சூடா³மணே’ – இளம்பிறை சந்திரனை நெற்றியில, மௌலில அணிந்து கொண்டு இருப்பவரே! ‘பஶுபதே’ – எல்லா உயிர்களுக்கும் தலைவரே! ‘ஸ்வாமின்’ – என்னுடைய தலைவரே!
உங்களுக்கு பூஜை பண்ணனும்னு ஆசைப்படறேன். இப்ப தான் சிவராத்திரி ஆச்சு. சிவராத்திரியின் போது மத்த நாளைவிட கொஞ்சம் விமரிசையா நம்ம ஆத்துல ஒரு பூஜை பண்ணி சந்தோஷப் பட்டுப்போம். ஆனா ‘பகவானுக்கு உண்மையான பூஜை எது? அதை பண்ண முடியுமா நம்மால?’ அப்படீன்னு ஆச்சாரியார் வியக்கறார்.
‘வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴’ -உனக்கு வஸ்த்ரம் உடுத்தி உபசாரம் பண்ணனும்னா, ‘ஸஹஸ்ரகரதா’ – சூரியனைப் போல ஆயிரம் கைகள் வேணும். ஏன்னா, பகவான் அவ்ளோ பெரிய வஸ்து. சிவ மயம் இல்லையா? எங்கும் நிறைந்திருக்கிற பரம்பொருள். அவருக்கு ஒரு வஸ்த்ரம் உடுத்தணும்னா எவ்ளோ கைகள் வேணும்?
‘புஷ்பார்சநே விஷ்ணுதா’ – உனக்கு புஷ்பார்ச்சனை பண்ணனும்னா விஷ்ணுவாத்தான் இருக்கணும் அப்படீங்கிறார்.
அது என்னனா, விஷ்ணு பகவான் ஒரு தடவை 1௦௦௦ தாமரைகளை எடுத்து வெச்சுண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை பண்ண ஆரம்பிக்கறார். பரமேஸ்வரன் அவருடைய பக்தியை சோதிக்கறதுக்காக ஒரு தாமரையை மறைச்சுடறார். 999 நாமாவளி சொல்லி அர்ச்சனை பண்ணின உடனே பார்த்தா, ஒரு தாமரை குறையறது.
உடனே விஷ்ணு பகவான் நினைச்சாராம். நம்மளை புண்டரீகாக்ஷன்னு சொல்றா. அதனால இந்த கண்ணையே அர்ப்பிப்போம்.. நம்ம கண்ணையே ஒரு தாமரைன்னு சொல்றா. இதையே பகவானோட பாதத்துல அர்ப்பிப்போம்னு தன் கண்ணை எடுக்கப் போயிட்டாராம். அப்போ பரமேஸ்வரன் அவருக்கு தரிசனம் கொடுத்து, சுதர்சன சக்ரம் கொடுத்தார்னு புராணக் கதை. அந்த மாதிரி உனக்கு அர்ச்சனை பண்ணனும்னா விஷ்ணுவா இருந்தா தான் முடியும்.
‘க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽ’ – உனக்கு சந்தனம் பூசணும்னா, ‘க³ந்த⁴வஹாத்மதா:’, ‘க³ந்த⁴வஹாத்ம:’ ன்னா வாயு பகவான். வாயு பகவானா இருந்தா தான் உள்ளபடி எல்லா வாசனைகளையும் கொண்டு வந்து சமர்ப்பித்து, உனக்கு சந்தனம் பூசினதா ஆகும்.
‘அன்னபசநே’ -உனக்கு அன்னம் பண்ணி, சாதம் பண்ணி மஹா நைவேத்யம் பண்ணணும்னா, ‘ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா’. ‘ப³ர்ஹிர்முக²:’ ன்னா அக்னி பகவான். அக்னி பகவான் அன்னத்தை சமைக்கிறார். மத்த தேவர்கள்… அக்னி பகவான் முதலிய தேவர்களாக இருந்தால் தான், எல்லா தேவர்களும் சேர்ந்து பண்ணாத்தான் உனக்கு பொருத்தமான நைவேத்யம் பண்ணி படைக்க முடியும்.
‘பாத்ரே’ – உனக்கு பூஜை பண்றதுக்கு பாத்திரங்கள், ‘காஞ்சநக³ர்ப⁴தா’ – ஸ்ருஷ்டி கர்த்தாவான ஹிரண்யகர்ப்பரா இருந்தாதான் உனக்கு பூஜை பண்றதுக்கு வேண்டிய பாத்திரங்கள் எல்லாம் ஸ்ருஷ்டி பண்ண முடியும்.
‘மயி அஸ்தி சேத்³’ – என்கிட்ட இதெல்லாம் இருந்தா, ‘தே ஶுஶ்ரூஷாம் கரவாணி’ – உனக்கு பூஜை பண்ண முடியும். என்னால எப்படி பண்ண முடியும்? அப்படீன்னு சொல்றார்.
பகவானோட பூஜை நமக்காக, நம்ம க்ருஹத்துல ஒரு லிங்காகாரமாவோ, ஒரு மூர்த்தியாவோ வந்து நம்முடைய பூஜையை ஏத்துக்கறார். ஆனா நான் எதோ விமரிசையா பூஜை பண்ணிட்டேன்னு நினைக்கறதுக்கு இல்ல. பகவான் அவ்ளோ பெரிய வஸ்து. நமக்காக இவ்வளவு எளிமையான உருவம் எடுத்துண்டு, இந்த பூஜையை ஏத்துண்டு, இது மூலமா, ‘எங்கும் நிறைந்திருக்கிற விபு⁴! அவர்தான் த்ரிலோகீ குரு ங்கிற ஞானத்தை நமக்கு அநுக்ரஹம் பண்ணனும்’ அப்படீங்கிற பிரார்த்தனை.
இந்த சிவராத்திரி புண்யகாலம் வந்த போது சிவ பக்தர்கள் அப்படீன்னு நினைச்சா, மஹாபெரியவா! அவா பண்ண மாதிரி சிவ பூஜை யார் பண்ணியிருப்பான்னு தெரியலை. எத்தனை வருஷங்கள் சந்திரமௌலீஸ்வரர் பூஜை. அதுவும் பிரதோஷ பூஜையும், சிவராத்திரி பூஜையெல்லாம் பெரியவா அவ்ளோ விஸ்தாரமா பண்ணியிருக்கா. அவ்ளோ ஆசை ஆசையா பண்ணியிருக்கா.
சிவ பக்தர்கள்னு நினைக்கும்போது சேஷாத்ரி ஸ்வாமிகள்! திருவண்ணாமலை போயி, திருவண்ணாமலையோடயே இருந்தார்.
ரமணபகவான்! திருவண்ணாமலைலயே அருணாசலேஸ்வரரை கட்டிண்டு, கோவில்ல பாதாள லிங்கத்துல போய் சரணாகதி பண்ணி, அந்த மலையிலேயே வசித்து, அந்த மலையோடயே ஐக்யம் ஆனவர். அப்புறம் ராமகிருஷ்ண பரமஹம்சர்!
அவர் ஒரு சிவராத்திரிக்கு, சின்ன வயசுல, பரமேஸ்வரனா வேஷம் போட்டுண்டு நடிக்கும் போது, அவருக்கு சமாதி வந்துடறது. சமாதி கூடறது.அப்படி ஒரு சிவ பக்தர். அப்படீன்னு இந்த பெரியவாளை மகான்களை எல்லாம் நினைச்சேன். அப்போ இவா எல்லாரும் இந்த பகவானையே வழிபட்டு, அதனால ஞானம் அடைய வேண்டும், அது தான் வாழ்க்கையோட பயன், அப்படீன்னு தங்களுடைய சிஷ்யர்களுக்கு உணர்த்தின சம்பவங்கள் ஞாபகம் வந்தது.
இந்த முந்தின ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ ன்னு கேட்கறார் இல்லையா?
அந்த மாதிரி ஏதோ ஒரு பூர்வ புண்யத்துனால, இந்த மாதிரி மஹான்களை போய் நமஸ்காரம் பண்றவாளுக்கு, அந்த மஹான்கள் ஒரு வார்த்தை சொல்றா. அந்த சௌக்யோபதேசம் என்ன பண்றதுன்னா, அவா உலகாதாயமா பண்ணிண்டு இருந்த காரியங்களை விடுத்து, பகவானுடைய வழிபாடையே பண்ணி அந்த ஞானத்தை, எப்படி இந்த ஸ்லோகத்துல, ‘உனக்கு எப்படி பூஜை பண்ண முடியும்? நீ சர்வ வியாபி! சர்வக்ஞன்!’ அப்படீன்னு ஆச்சார்யாள் சொல்றா இல்லையா.
அந்த உணர்வு அனுபவம் அடையறதுக்கு எந்த வழியில போகணுமோ, அவா பண்ணிண்டிருந்த தொழிலை விட்டு, ஒரு வித்தை, ஒரு தொழில், அதெல்லாம் நம்பாம அதை கைவிட்டு பகவானோட பஜனத்தை பண்ணி, பகவானை அடையறதுக்கு அந்த உபதேசம் ஒரு வழி வகுக்கறது.
சேஷாத்ரி ஸ்வாமிகளை எடுத்துண்டா, வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், அவர் மைசூர் மஹாராஜாக்கு சமையற்காரரா இருக்கார். ‘உனக்கு திருப்புகழ் மந்திரம், வள்ளிமலைக்கு போ’ன்னு சொல்லி, வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளா ஆக்கினது சேஷாத்ரி ஸ்வாமிகள். அவருடைய அந்த ஒரு வாக்கு.
அதே மாதிரி ராமகிருஷ்ண பரமஹம்சர் எடுத்துண்டா, அவருடைய கதையில நாக்³ மஹாஷைனு ஒரு மஹான் வருவார். ரொம்ப உயர்ந்த ஸ்திதியில இருந்தார். அந்த நாக்³ மஹாஷை, ஹோமியோபதி doctorஆ இருக்கார். ரொம்ப நேர்மையான doctorஆ இருக்கார். ஒரு பணக்காரர் உயிரை காப்பாத்தி கொடுத்தபோது அவா நிறைய பணம், வெள்ளிக் கூஜா எல்லாம் கொடுத்த உடனே, அவர் ‘அதெல்லாம் இல்லை. என்னோட 20 ரூபா fees மட்டும் கொடுங்கோ’ன்னு வாங்கிக்கறார். அப்படி வைத்திய தொழில் பண்ணிண்டிருக்கறவரையே ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘இப்படி சொட்டு சொட்டா மருந்தை விழறதையே எண்ணிண்டிருந்தா, நீ எப்ப பகவானை தியானம் பண்றது!’, அப்படீன்னு சொல்றார். உடனே இவர் அந்த மருந்துகளை எல்லாம் கங்கையில தூக்கிப் போட்டுட்டு முழுநேரம் பகவானுடைய பஜனத்தையே பண்ணிண்டிருக்கார்.
அதே மாதிரி ரமண பகவானோட கதையில, ரமணரோட நேரடியா பழகி அவருடைய அநுக்ரஹம் பெற்ற சிஷ்யர்கள் ஒரு 75 பேருடைய சரித்திரத்தை, ‘ரமண பெரிய புராணம்’ அப்படீன்னு கணேசன்ங்கிறவர் எழுதியிருக்கார். ரொம்ப ஆனந்தமா இருக்கு அதை படிக்கறதுக்கு. அந்த புஸ்தகத்துல வெங்கடேச சாஸ்த்ரி ன்னு ஒருத்தரைப் பத்தி எழுதியிருக்கார்.
அந்த வெங்கடேச சாஸ்த்ரி ரமணருக்கு தூரத்து உறவு. அவர் சின்ன வயசுல அம்மா காலமாய், அந்த சித்தி ரொம்ப கொடுமை படுத்தறா. அதுனால, அவா அப்பா அவரை கொண்டு போயி திருவனந்தபுரத்துல ஆயுர்வேத காலேஜ்ல சேர்த்துடறார். அந்த ஆயுர்வேத காலேஜ்ல, அந்த principal, இவர் ரொம்ப புத்திமானா இருக்கார்னு தெரிஞ்சுண்டு, அந்த ஆயுர்வேதத்துக் கூட இவருக்கு ஜோசியமும் சொல்லித் தந்து, ஜோஸ்யத்துல, முக்யமா ப்ரஸ்னம் பாக்கறதுன்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஒருத்தர் வந்து ஒரு கேள்வி கேட்டார்ன்னா, வந்தவா எந்த திக்குல இருந்து வந்தா? அவா பேரோட முதல் எழுத்து என்ன? கேள்வி கேட்ட நேரத்துடைய ஜாதகம் என்ன? இப்படி சில parametersஐ வெச்சுண்டு சரியான பதில் சொல்லிடுவா. ஒரு பொருள் தொலைஞ்சு போச்சுன்னா, அவா இந்த இடத்துல இருக்குன்னு பதில் சொல்லிடுவா. அந்த மாதிரி ப்ரஸ்னம்னு ஒண்ணு. அந்த ப்ரஸ்னத்துல இந்த வெங்கடேச சாஸ்த்ரி, ரொம்ப திறமையோட விளங்கி நல்லா சம்பாதிச்சுண்டு இருக்கார்.
அப்போ ரமண பகவான் கிட்ட ஒரு வாட்டி வர்றார். ரமண பகவான்கிட்ட பேசிண்டிருக்கும்போது, ‘வித்தைகளுக்குள்ளேயே இந்த ஜோஸ்யம், ப்ரஸ்னம் இந்தளவுக்கு துல்லியமானதும், உயர்ந்ததுமான வித்தை ஏதாவது உண்டா!’ அப்படீன்னு அந்த வித்தையோட பெருமையை அவர் சொல்றார்.
அப்ப ரமண பகவான் ஒரே வார்த்தையில பதில் சொல்றார். ‘எல்லா வித்தைகளைக் காட்டிலும் மேலானது ஆத்ம வித்தைதான்’, அப்படீன்னு சொல்றார். அந்த ஆத்ம வித்தைதான் சர்வோத்க்ருஷ்டம் னு சொன்னது இவருக்கு ஒரு பொறி தட்டி, இவர் ‘அப்படீன்னா நான் ஜோசியத்தை விட்டுடறேன். உங்க கிட்டயே இருக்கேன். எனக்கு நீங்க வழி காண்பிக்கணும்’, அப்படீங்கற போது, அங்க ரமணரோட அம்மா அழகம்மா இருக்கா. அவா சொல்றா, ‘உனக்கு பொண்ணு பார்த்து வெச்சிருக்காளேப்பா! நீ எப்படி எல்லாத்தையும் விட்டுட்டு வருவே!’, அப்படீன்ன உடனே ரமணரும் சிரிக்கறார். ‘
நீ போயிட்டு வா’ங்கறார். சரின்னு அவர் போயி கல்யாணம் பண்ணிண்டு ஒரு பத்து வருஷம் சம்பாதிச்சிண்டு சௌக்கியமா இருக்கார். அவாளுக்கு ஒரு குழந்தை பொறக்கறது. அந்த பிள்ளை 15 வயசுதான் இருப்பான்னு இவருக்கு இந்த ஜாதகத்தை பார்த்த உடனே தெரியறது. அப்போ அவருக்கு திரும்பவும் வைராக்யமா மனசு போயி, அவர் தன்னோட மனைவி, விசாலாக்ஷினு அந்த மாமி பேரு. அவாளை சாலா மாமிங்கறா. அவாகிட்ட, ‘நான் உனக்கு பணம் நிறைய சேர்த்து வெச்சிருக்கேன், நீ இந்த குழந்தையோட இரு.
நான் ரமண பகவான்கிட்ட போகப்போறேன்’, அப்படீன்ன போது, அந்த மாமி பூர்வ காலத்து மைத்ரேயில்லாம் மாதிரி, ‘நீங்க இந்த பணத்தைக் காட்டிலும் உயர்ந்த ஒண்ணு கிடைக்கும் ரமணருடைய சன்னதியிலனு, போறேள்னா, நானும் வரேன். என்னையும் அழைச்சுண்டு போங்கோ’ங்கறா. இவர், ‘இல்ல இல்ல.. நான் அங்க போயி ஜோசியம்லாம் சொல்லி பணம் சம்பாதிக்கப் போறது இல்ல. பிச்சை எடுத்து வாழப் போறேன்’ன உடனே, இந்த மாமி, ‘நீங்க எந்த பிச்சை எடுத்து எதை கொண்டு வரேளோ அதை நான் சாப்பிடறேன். உங்களோட இருக்கணும். தயவு பண்ணுங்கோ’ன்ன உடனே, ‘சரி வா’ன்னு கூட்டிண்டு போறார். அவா இரண்டு பேரும் போறா.
அங்க ரமண பகவான், அப்போ ரமணாஸ்ரமமா ஆயிடறது. அந்த ரமணாஸ்ரமத்துல ரமணருடைய தம்பி manager மாதிரி சர்வாதிகாரின்னு, அவர் பார்த்துண்டிருக்கார். அவர் ‘இந்த ஆஸ்ரமத்துல ஏதாவது ஒரு கைங்கர்யம் பண்றவாளுக்குத்தான் இங்க சாப்பாடு. இங்க தங்கலாம்’னு சொல்லி, இந்த சாஸ்த்ரிகள் கிட்ட ‘நீங்க இங்க பூஜை பண்ணுங்கோ, அப்ப நீங்க இங்க இருந்துக்கலாம்’ அப்படீன்ன போது ரமணர்கிட்ட கேட்கறார். ரமணர், ‘நீ வந்த காரியத்தைப் பாரு’ அப்படீங்கறார்.
உடனே வெங்கடேச சாஸ்த்ரி அடி அண்ணாமலைல ஒரு மண்டபத்துல தங்கிண்டு பிச்சை எடுத்துண்டு, தினம் ரமணரை தரிசனம் பண்ணிண்டு ஞான மார்க்கத்துல விசாரம் பண்ணிண்டிருக்கார். ரமணர், அவர் கிட்ட இருந்து நிறைய விஷயங்கள், சாஸ்திர விஷயங்கள்லாம், அவர் நல்ல படிச்சவரா இருக்கறதுனால, அவர்கிட்ட சந்தேகங்கள் எல்லாம் கேட்டுண்டு, ரெண்டு பேரும் விஷயங்கள் பரிமாறிக்கறா. அந்த மாதிரி இவா பேசறது எல்லாம் சமஸ்க்ருதத்துல, காவிய கண்ட கணபதி முனி அந்த மாதிரி பெரியவாளெல்லாம் வெச்சுண்டு discuss பண்ணதை, ரமண பகவான் ‘நீ இதையெல்லாம் சாலாக்கு சொல்றயோ’ ன்னு கேட்கறார்.
அப்போ, ‘அவ கிராமத்து பொண்ணு, அவளுக்கு இதெல்லாம் ஒண்ணும் புரியாது’ங்கிறார். உடனே அவர்கிட்ட ‘இல்ல இல்ல.. அவளுக்கு நீ இதெல்லாம் சொல்லு, தமிழ்ல சொல்லு’ ங்கிறார் ரமண பகவான். அந்த மாதிரி ‘எப்போ ஒரு ஜீவன் ஞான நாட்டத்தோட பணத்தை நினைக்காம உன் கூட வந்திருக்காளோ, அப்போ உன் levelக்கு அவளைக் கொண்டு வரணும்’ அப்படீன்னு சொல்றார் ரமணர். அந்த மாதிரி அந்த மாமிக்கும் அவர் சொல்லிக் கொடுக்கறார். இதுல அந்த பையனுடைய ஆயுசு கம்மிதான்னு ரமணர்கிட்ட சொன்ன போது, ரமணர், ‘எத்தனையோ ஸ்ருஷ்டி! ஒரு பலா மரத்துல ஒரு நல்ல பலாப்பழம், பெருசா ஆகி பழுக்கணும்னா, எத்தனையோ கீழ விழுந்துடறது, வெம்பி போறது’, அப்படீன்னு சொல்றார். அதனால இவருக்கு உன் பிள்ளையை காப்பாத்தறேன்ங்கிற மாதிரி message வரலை. அதனால இவர் ரமணர்கிட்ட வந்துடறார். மனைவியும் அந்த பிள்ளை காலமான போது, ரொம்ப ஒண்ணும் ஸ்ரமப் படலை. அப்படி அவா ரொம்ப ஞான வைராக்யத்தோட இருக்கா.
கணேசன் அண்ணா, இந்த புஸ்தகம் எழுதினவர், இரண்டு incident சொல்றார். பின்னால, இந்த வெங்கடேச சாஸ்த்ரிகளை சாஸ்த்ரி மாமாங்ற அவா. அவர்கிட்ட இரண்டு விஷயம் சொல்லி, அவருடைய ஞானத்தை சொல்றார். ஒண்ணு, ஒரு தடவை இந்த கணேசன் அண்ணாவுக்கு சித்து வேலையெல்லாம் பண்ற ஒரு சாமியார்கிட்ட interest வர்றது. ‘அவரை போய்ப் பார்க்கணும் எனக்கு!’ அப்படீன்னு சொன்ன போது இந்த சாஸ்திரி மாமா சொன்னாராம், ஒரு கையில திராக்ஷை எடுத்து, இவர்கிட்ட ‘நீ கண்ணை மூடிக்கோ’ன்னு சொல்லி, கையில திராக்ஷை கொடுத்து, ‘கையை மூடிண்டு எத்தனை திராக்ஷை இருக்கு’ன்னு சொல்லுங்கறார்.
‘எனக்கு எப்படி தெரியும்? கை மூடியிருக்கே’ன்ன உடனே ‘உன் மனசுல வர்ற ஒரு number ஐ சொல்லு’ங்கிறார். 13 ன்ன உடனே, ‘எண்ணிப் பார். 13 இருக்கும்ங்கிறார்’. correctஆ இருக்கு. அப்போ இந்த சாஸ்த்ரி மாமா சொல்றார். ‘நான் இதைப் பார்த்து எண்ணிட்டேன் 13 ன்னு. உன்கிட்ட கொடுத்தேன். என் மனசோட பலத்துனால உன் மனசைப் பற்றி, அந்த 13 ங்கிற numberஐ உன் மனசுக்குள்ள கொடுத்தேன். அதனால நீ சரியா சொன்ன! அந்த மாதிரி ஒரு பலம் கூடின மனசு, பலம் குறைச்சலா இருக்கிற மனசை கைப்பற்றறதுதான் இந்த சித்து விளையாட்டு, இதெல்லாம். அதனால அவாகிட்ட எல்லாம் போகாதே. ரமண பகவானுக்கு மேல குருவா! வேண்டாம்’ அப்படீன்னு சொல்லிடறார்.
இன்னொன்னு incident, அந்த கடைசி காலத்துல அந்த சாஸ்த்ரி மாமாக்கு கால் ஸ்ரமம் இருக்கு. அப்போ கணேசன் அண்ணா ‘உங்களுக்கு கால் இப்படி கஷ்டமா இருக்கே’ அப்படீன்ன போது, ‘ஏன் காலைப் பார்க்கற, முக்காலைப் பாரு. நான் ரமண த்யானத்துல ஆனந்தத்துல இருக்கேன்.’ அப்படீன்னு சொல்றார். அப்படி ஒரு ஸாதுவுடைய வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு காரணம் ரமணருடைய அந்த ஒரு வார்த்தை. ‘எல்லா வித்தைகளைக் காட்டிலும் ஆத்ம வித்தைதானே சிறந்தது’ அப்படீன்னு சொல்றார்.
இதே மாதிரி ஸ்வாமிகளும், post office ல work பண்ணிண்டு இருந்தார். ஆனா ஸ்வாமிகள் ராமாயண, பாகவதம் சொல்றதைக் கேட்டு நாகப்பட்டினம், ஆலங்குடி அந்த மாதிரி அங்க கேட்கற பெரியவா எல்லாம் ‘இது சாதாரண post office clerk சொல்ற கதை இல்லேப்பா! நான் ஆலங்குடி பெரியவாள் கிட்ட கேட்ட மாதிரி இருக்கு! நீ தனிப் பிறவி!’ ன்னு சொல்றா.
அது ஸ்வாமிகளோட மனசுல work ஆயிண்டே இருந்தது. பல விதமான ஸ்ரமங்கள் வந்தது. பணக் கஷ்டம், கடன்கள் எல்லாம் ஜாஸ்தியான போது மஹாபெரியவா கிட்ட போயி ஸ்வாமிகள், ‘எங்க அப்பா, தாத்தா எல்லாம் ராமாயணம் படிச்சிண்டிருந்தா. நான் இந்த மாதிரி உத்யோகத்துக்கு வந்துட்டேன். இதுனால ஸ்ரமங்களோன்னு எனக்குத் தோன்றது. ராமாயண பாகவதமே படிச்சிண்டிருக்கணும்.
முழுநேரம் பகவானோட பஜனத்துல இருக்கணும்னு ஆசைப்படறேன்’னு சொன்னபோது, பெரியவா ரெண்டு கையையும் தூக்கி, ‘ஆஹா! ரொம்ப சந்தோஷம். பெரியவா பண்ணதையே பண்ணு! பெரியவா பண்ணதையே பண்ணு!’, அப்படீன்னு பெரியவா ஆசீர்வாதம் பண்ணியிருக்கா. அதுனால ஸ்வாமிகளோட வாழ்க்கையே மாறிடுத்து. அந்த கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய அனுக்ரஹத்துனால, இன்னிக்கும் எத்தனையோ நூத்துக்கணக்கான பேர் ராமாயண, பாகவதம் படிக்கறா.
அப்படி, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ அப்படீங்கிற வார்த்தைப்படி, மஹான்களுடைய வாக்கு, சௌக்யோபதேசமா இருந்து பந்தங்கள்ல இருந்து விடுவிக்கறது. இந்த சிவராத்திரி, அதுல நாம ஆசைக்குப் பண்ற பூஜை, அதை பகவான் ஏத்துக்கறார். ஆனா அதோட நிஜமான முடிவு என்னமா இருக்கணும். அந்த ஞானம், அந்த ஞானத்துக்கு மஹான்கள் எப்படி ஒரு உபதேசம் பண்ணி, பக்குவ ஆத்மாக்களை அந்த வழியில தள்ளி விடறாங்கிறது எல்லாம் ஞாபகம் வந்தது.
இளம்பிறை சிரத்திலணிந்து, பசுவாம் உயிரனைத்துக்கும் அதிபதியாக இருந்து கொண்டு, மூவுலகங்களுக்கும் குருவாக உள்ள இறைவ! உனக்கு ஆடையுடுத்தி உபசரிக்க ஆயிரங்கரங் கொண்ட கதிரவன் தன்மையும், பூக்களைக் கொண்டு பூஜிக்க விஷ்ணுத்தன்மையும், கந்தம் பூசுவதற்கு வாஸனையை ஏற்றிச் செல்லும் வாயுத்தன்மையும், அன்னத்தை நிவேதனம் செய்ய அக்னிமுகங் கொண்ட தேவத்தன்மையும். பூஜைக்குரிய பாத்திரங்களமைக்க ஸ்ருஷ்டிகர்த்தா வான ஹிரண்யகர்ப்பரின் தன்மையும் என்னிடமிருக்குமானால் (அப்போதுதான்) உன்னுடைய வழிபாட்டை செவ்வனே செய்யக்கூடியவனாவேன்!
LS :
அநர்க்ய கைவல்யபத தாயிநீ :
கைவல்ய பதம் என்பது நான்கு நிலைகளைத்தாண்டி - ( ஸாலோகம் , ஸாமீப்யம் , ஸாரூபம் , ஸாயுஜ்யம் ) . அம்பாளுடைய ஸாயுஜ்ய பதத்தையும் தாண்டி - இருக்கக்கூடிய மோக்ஷ பதம் . விலையற்ற இந்த பதத்தை நமக்குத் தருபவள் .
ஸ்துதிமதீ : . மாநவதீ :
மங்கலாக்ருதி : பராமோதா : மனோமயீ : சாச்வத ஐச்வர்யா :
சர்மதா :
=========================================================================
Comments